நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த இவானா பெர்கோவிக் என்ற பெண், மும்பையில் வாழ்ந்து வரும் நிலையில், இந்தியாவில் தனது முதல் குழந்தையைப் பெற்றெடுத்த அனுபவத்தை உணர்வுபூர்வமாகச் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

நெதர்லாந்து நாட்டின் மருத்துவ முறைக்கும் இந்தியாவின் மருத்துவ முறைக்கும் இடையே உள்ள வித்தியாசங்களைக் குறித்துப் பேசிய அவர், இந்தியாவில் உள்ள தனியார் மருத்துவமனைகளின் அரவணைப்பும், நோயாளிகள் மீது அவர்கள் காட்டும் அக்கறையும் தன்னை மிகவும் கவர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

தன் சொந்த நாட்டில் பிரசவத்தின் போது மருந்துகள் தருவதைத் தவிர்ப்பார்கள் என்றும், குழந்தை பிறந்த உடனே வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள் என்றும் கூறிய அவர், மும்பை மருத்துவமனையில் தனக்குக் கிடைத்த அறை, செவிலியர்களின் பரிவான கவனிப்பு மற்றும் குழந்தையைக் கொண்டாடிய விதம் ஆகியவை மிகவும் நெகிழ்ச்சியளித்ததாகப் பாராட்டியுள்ளார்.

இருப்பினும், மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குத் திரும்பிய பிறகு, தனக்கு ஏற்பட்ட சவால்களையும் அவர் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். உறவினர்கள் மற்றும் சொந்தங்கள் யாருமன்றி, மும்பையின் சிறிய அடுக்குமாடி குடியிருப்பில் குழந்தையுடன் தனியாக இருந்த நாட்கள் தமக்குக் கடும் தனிமை உணர்வையும் மன அழுத்தத்தையும் தந்ததாக இவானா கூறியுள்ளார்.

மேலும், மும்பையில் நிலவிய 40 டிகிரிக்கும் அதிகமான சுட்டெரிக்கும் வெயில், அதிக போக்குவரத்து நெரிசல் மற்றும் புதிய சூழல் காரணமாகத் தன் குழந்தையை அழைத்துக் கொண்டு வெளியே செல்லக்கூடப் பயந்ததாக அவர் வேதனையுடன் தெரிவித்தார். அந்தச் கடினமான காலகட்டத்தில், தான் வளர்த்த செல்ல நாய் மட்டுமே தனக்கு மிகப் பெரிய ஆறுதலாக இருந்தது என்றும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

குழந்தை பிறந்த நான்கு மாதங்கள் வரை இந்தத் தனிமையையும் சூழலையும் எதிர்கொண்ட அவர், ஒருகட்டத்தில் மூச்சுத் திணறும் நிலைக்குத் தள்ளப்பட்டதால், கொஞ்சம் ஓய்வு தேடித் தனது சொந்த நாடான நெதர்லாந்திற்குப் பயணமானதாகக் கூறியுள்ளார்.

இந்த பதிவு இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளின் தரமான பராமரிப்பைப் பிரதிபலிப்பதாக அமைந்திருந்தாலும், சொந்த பந்தங்களை விட்டுத் தொலைதூரத்தில் இருக்கும் ஒரு புதிய தாயின் மனப்போராட்டத்தையும் மிகத் தெளிவாக உணர்த்துகிறது. வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு பெண், இந்தியாவில் தான் பெற்ற தாய்மை அனுபவத்தை இவ்வளவு நேர்மையாகவும் உணர்வுபூர்வமாகவும் பகிர்ந்து கொண்டது தற்போது இணையவாசிகளிடையே பெருமளவில் பகிரப்பட்டு வருகிறது.

“>