காஞ்சிபுரம் மாவட்டம் பழைய சீவரம் பகுதியில், ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த இளம் பெண் ஒருவர் குடும்பத் தகராறு காரணமாகக் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பழைய சீவரம் பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம் (28) மற்றும் சோனியா (28) ஆகிய இருவரும் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளனர். பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் இவர்களுக்கு வெகு விமர்சையாகத் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
தற்போது சோனியா ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்து வந்த நிலையில், கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்றும் இருவருக்கும் இடையே மீண்டும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த ஊர்க்காவல் படை வீரரான கணவர் சோமசுந்தரம், கர்ப்பிணி மனைவி சோனியாவின் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் சோனியாவின் சடலத்தைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, தப்பியோடிய சோமசுந்தரத்தைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
