உத்தரகண்ட் மாநிலம் தேராதூன் – பவுந்தா சாகிப் பழைய நெடுஞ்சாலையில், டௌன்ஸ் ஆற்றின் மீது சுமார் ரூ.16 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய பாலம் திறக்கப்பட்ட வெறும் 16 நாட்களிலேயே முதல் மழையிலேயே இடிந்து தாழ்ந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு கருதி இந்தப் பாலத்தில் உடனடியாக வாகனப் போக்குவரத்து முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளதுடன், இதன் கட்டுமானத் தரம் குறித்துப் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளதால் பொதுப்பணித்துறை தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.
கடந்த 2025 செப்டம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் அப்பகுதியில் இருந்த பழைய பாலம் சேதமடைந்ததை அடுத்து, பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்காக தற்காலிகப் பாலம் அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அதே இடத்தில் ரூ.16 கோடி மதிப்பீட்டில் புதிதாகப் பாலம் கட்டும் பணிகள் மார்ச் 2026-ல் தொடங்கப்பட்டு மும்முரமாக நடைபெற்று வந்தன. பணிகள் முடிவடைந்த நிலையில், கடந்த ஜூலை 12 ஆம் தேதியன்று இந்த புதிய பாலத்தில் வாகனப் போக்குவரத்து அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது.
View this post on Instagram
ஆனால், புதிய பாலம் திறக்கப்பட்டு வெறும் 16 நாட்களே ஆன நிலையில், அங்கு பெய்த முதல் கனமழையிலேயே பாலத்தின் ஒரு பகுதி திடீரெனப் பலத்த சேதமடைந்து தாழ்ந்தது. இதனால் பாலத்தின் நடுவே பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு, விபத்து அபாயம் ஏற்பட்டதால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் உடனடியாகப் போக்குவரத்தைத் தடுத்து நிறுத்தினர். குறுகிய காலத்திற்குள் கோடிக்கணக்கில் செலவிட்டு கட்டப்பட்ட பாலம் இவ்வளவு விரைவாகச் சேதமடைந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலத்தின் தரம் குறித்துக் கேள்வி எழுப்பியுள்ள உள்ளூர் மக்கள், போதிய பாதுகாப்பு இல்லாமல் தரமற்ற பொருட்களைப் பயன்படுத்திக் கட்டுமானப் பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து, பொதுப்பணித்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருவதுடன், இந்தச் சரிவுக்கான உண்மையான காரணங்கள் குறித்துத் தீவிர விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
