தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள அய்யாவாடி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது உலகப் புகழ்பெற்ற ஸ்ரீ மகா பிரத்யங்கிரா தேவி திருக்கோவில். அண்ட சராசரங்களையும் அடக்கி ஆளும் உக்கிர தெய்வமான இத்தேவி, நான்கு சிங்கங்கள் பூட்டிய ரதத்தில் சிம்ம முகத்தோடும் எட்டு கைகளோடும் சுயம்பு மூர்த்தியாக இங்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். மகாபாரத காலத்தில் பஞ்சபாண்டவர்கள் தங்கள் ஆட்சி அதிகாரத்தையும் நாட்டையும் இழந்து தவித்தபோது, இந்தத் தலத்திற்கு வந்து இங்குள்ள ஆலமர இலைகளால் அம்மனை அர்ச்சித்து வழிபட்டு, இழந்த அத்தனை செல்வங்களையும் மீண்டும் பெற்றதாகக் கூறப்படுகிறது.

பஞ்ச பாண்டவர்கள் ஐவரும் வந்து வழிபட்டதால் ‘ஐவர்பாடி’ என்று அழைக்கப்பட்ட ஊர், காலப்போக்கில் மருவி ‘அய்யாவாடி’ என்று பெயர் பெற்றது. மனித நாவில் ஒரு மிளகாய் பட்டாலே கண்ணிலும் நாசியிலும் நீர் பெருகும், சமைக்கும் போது ஒரு மிளகாய் கூடுதலானாலே கார நெடியால் தும்மல் வரும் என்பது இயல்பு. ஆனால், அய்யாவாடி பிரத்தியங்கிரா தேவி கோவிலில் மாதந்தோறும் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் நடைபெறும் ‘நிகும்பலா யாகத்தில்’ ஆயிரக்கணக்கான கிலோ காய்ந்த மிளகாய்கள் அக்னி குண்டத்தில் கொட்டப்படும் போது, ஒரு சிறு கார நெடியோ அல்லது தும்மலோ அங்குள்ள பக்தர்களுக்கு ஏற்படுவதில்லை.

கூடைகூடையாக மிளகாய் அக்னியில் கொட்டப்பட்டாலும், அந்த நெடி முழுவதையும் தேவியே தன்வயப்படுத்தி உள்வாங்கிக் கொள்கிறாள் என்பது அறிவியலுக்கு எட்டாத மாபெரும் அற்புதமாக இன்றளவும் விளங்குகிறது. இத்தகைய சிறப்புமிக்க நிகும்பலா யாகத்தின் பின்னணியில் ராமாயணக் கதையும் சொல்லப்படுகிறது. இராவணனின் மகனான இந்திரஜித், தேவர்களை வெல்லும் பேராற்றலைப் பெறுவதற்காக இந்த ஆலயத்தில் தான் நிகும்பலா யாகம் செய்ததாகக் கூறப்படுகிறது. எட்டு திசைகளிலும் மயானங்கள் சூழ்ந்த இந்த அற்புதத் தலத்தில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரள, வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க மிகக் கோலாகலமாக இந்த யாகம் நடத்தப்படுகிறது.

அக்னி குண்டத்தில் மிளகாய் சமர்ப்பிக்கப்படும் போது நடக்கும் இந்த பரவச நிகழ்வு, ஆன்மீக அன்பர்களைப் பிரமிக்க வைக்கும் ஒரு அதிசய காட்சியாக அமைகிறது. வாழ்க்கையில் நினைத்த காரியங்கள் தடையின்றி வெற்றியடையவும், தொழில் மற்றும் குடும்பத்தில் ஏற்படும் எதிர்ப்புகள் அகலவும் இந்த நிகும்பலா யாகத்தில் கலந்து கொண்டு அம்மனை வழிபடுவது மிகச் சிறந்த தீர்வாகும். இங்கு வந்து மனதார வேண்டிக் கொண்டால் எதிரிகளின் சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட்டு, வாழ்க்கையில் இழந்த அமைதியும் செல்வமும் மீண்டும் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

இத்தகைய பரிபூரண அருள் வழங்கும் அய்யாவாடி பிரத்தியங்கிரா தேவியை அமாவாசை நாட்களில் தரிசித்து வழிபாடுகளில் பங்கேற்பது அசாத்திய நன்மைகளைத் தரும்.