உத்தரப் பிரதேச மாநிலம் காஜிப்பூர் மாவட்டத்தில் நடந்துள்ள ஒரு கோரச் சம்பவம் அப்பகுதி மக்களை உலுக்கியுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக ஆத்திரமடைந்த கணவன் ஒருவன், தனது மனைதியை நடுரோட்டில் ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்துள்ளான். கொலை செய்த கையோடு, தனது 8 மாத பச்சிளம் குழந்தையைக் கையில் தூக்கிக்கொண்டு அவன் நேராகக் காவல் நிலையத்திற்கே சென்று சரணடைந்த விடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்யப்பட்ட குசும் பிரஜாபதி என்பவர் சொந்தமாக பியூட்டி பார்லர் நடத்தி அதன் மூலமே தன் வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். இவரைக் கொடூரமான முறையில் தீர்த்துக்கட்டிய அவரது கணவர் ரவி என்ற ஹனி, அந்தப் பகுதியில் இசை நிகழ்ச்சி தொழில் நடத்தி வருகிறார். குசுமுக்கு ஏற்கனவே திருமணமாகி கணவரைப் பிரிந்த நிலையில், கடந்த 2024 ஆம் ஆண்டில் ரவியைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டு வாடகை வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர்.

சமீபத்தில் ரவி மீது ஒரு பெண் அளித்த புகாரைத் தொடர்ந்து, குசும் அந்தப் பெண்ணுக்கு ஆதரவாகக் காவல் நிலையம் சென்றது இவர்களுக்குள் பிரச்சனையை அதிகரித்துள்ளது. இந்த விவகாரத்தில் ஜாமினில் வெளியே வந்த ரவி கடும் கோபத்தில் இருந்துள்ளார். சம்பவத்தன்று மாலை திடீரென கத்தியுடன் குசுமின் அழகு நிலையத்திற்கு வந்த ரவியைப் பார்த்ததும், பயந்துபோன குசும் தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள சாலையில் சுமார் 100 மீட்டர் தூரம் அலறி அடித்து ஓடியுள்ளார். ஆனால், விடாமல் துரத்திய அந்த வெறி பிடித்த கணவன், நடுவழியில் அவரைப் பிடித்துக் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொன்றுள்ளான்.

மனைவி ரத்த வெள்ளத்தில் சரிந்ததைக் கண்டு கொஞ்சமும் தயங்காத அந்தப் பாவி, அருகில் அழுது கொண்டிருந்த தனது 8 மாதக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு நேராக  காவல் நிலையத்திற்கே சென்று தான் செய்த கொலையை ஒப்புக்கொண்டுள்ளான். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் குசுமின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், கொலை வழக்குப் பதிவு செய்து கொடூரக் கணவனைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.