உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் இதயங்களைக் கொள்ளையடித்த பாப் கிங் மைக்கேல் ஜாக்சனின் புகழ்பெற்ற ‘மூன்வாக்’ நடனத்தை மனிதர்கள் பலரும் பார்த்திருப்போம். ஆனால், மத்திய மற்றும் தெற்கு அமெரிக்காவுக்கு உட்பட்ட அடர்ந்த உஷ்ணமண்டல காடுகளில் வசிக்கும் ‘ரெட் கேப்ட் மனாக்கின்’ என்னும் மிகச் சிறிய பறவை, மைக் ஜாக்சனுக்கே சவால் விடும் வகையில் அச்சு அசலாகப் பர்ஃபெக்ட் மூன்வாக் நடனமாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது. இது தொடர்பான ஆச்சரியமூட்டும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருவதுடன், இணையவாசிகள் மத்தியில் பேசுபொருளாகவும் மாறியுள்ளது.
இயற்கையின் விசித்திரப் படைப்புகளில் ஒன்றான இந்தப் பறவைகளில், ஆண் இனத்தைச் சேர்ந்தவை தங்களின் பெண் துணையை (Partner) ஈர்ப்பதற்காக இந்த விசித்திரமான நடன முறையைக் கையாள்வது வழக்கமாகும். இதற்காகச் சன்னமான மரக்கிளையைத் தனது அரங்கமாகத் தேர்ந்தெடுக்கும் பறவை, தன் உடலைச் சற்றும் அசையாமல் கால்களால் மட்டும் மின்னல் வேகத்தில் முன்னும் பின்னுமாக நகர்த்தி மாயாஜாலம் நிகழ்த்துகிறது. இந்த ஒப்பிட முடியாத நடனத் திறமையுடன், மிரட்டலான வேகத்திலான இரக்கைகளின் சத்தமும் சேர்ந்து அந்தச் சூழலை ஒரு மியூசிக் கச்சேரி போல மாற்றிவிடுகிறது.
View this post on Instagram
வழக்கமான பறவை இனங்களைப் போல ஆண் பட்சியானது கூட்டைக் கட்டுவது அல்லது குஞ்சுகளைப் பராமரிப்பது போன்ற எத்தகைய பொறுப்புகளிலும் ஈடுபடுவது கிடையாது. மாறாக, தனக்கான சிறந்த இணையைத் தேர்ந்தெடுப்பதற்காக ‘லெக்’ என்று அழைக்கப்படும் குறிப்பிட்ட பொது இடங்களில் கூடி, தங்கள் உடல் உறுதியை இந்த நடனத் திறமை மூலம் வெளிப்படுத்துகின்றன.
மனிதர்களின் சாதாரணக் கண்களுக்கு அதிவேகமாகத் தெரியும் இந்த வித்தைகள், தற்போது இணையத்தில் வைரலாகும் ஸ்லோ-மோஷன் காட்சிகளின் மூலமாகவே உலகிற்குத் துல்லியமாகத் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
