மனித உடலின் மிக முக்கியமான உறுப்பான இதயத்திற்குள், மூளையைப் போன்றே செயல்படக்கூடிய ஒரு நுண்ணிய நரம்பு மண்டலம் அமைந்திருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். “இதயத்தின் சிறிய மூளை” என்று அழைக்கப்படும் இந்த நரம்பு வலையமைப்பு, மூளையின் உத்தரவுகளுக்காகக் காத்திருக்காமல் தானாகவே பல முக்கிய முடிவுகளை எடுக்கும் திறன் கொண்டது என்பது அறிவியல் உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பொதுவாக மனித உடலின் அனைத்து உறுப்புகளும் தலையில் உள்ள முதன்மை மூளையின் கட்டுப்பாட்டிலேயே இயங்குகின்றன. ஆனால், இதயத்தில் உள்ள இந்த நரம்பு மண்டலமானது , ஆயிரக்கணக்கான நரம்புச் செல்களால் பிணைக்கப்பட்டுத் தனியாக இயங்குகிறது. இதன் மூலம் இதயத் துடிப்பின் வேகம், சீரான ரத்த ஓட்டம் மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றை கணத்திற்கு கணம் கண்காணித்துத் தன்னிச்சையாகச் சரிசெய்யும் வேலையை இது செய்கிறது.
மேலும், நாம் பயம், கோபம், மகிழ்ச்சி போன்ற உணர்ச்சிகளைச் சந்திக்கும் போது, இதயத்தில் உள்ள இந்த குட்டி மூளை தான் முதன்முதலில் துடிப்பின் மாறுபாடுகளை உணர்கிறது. இது உணர்ச்சிகரமான தகவல்களை தலையில் உள்ள மூளைக்கு அனுப்பி, உடலை அதற்கேற்ப தயார் செய்ய உதவுகிறது. அதாவது, மூளை மட்டுமே இதயத்தைக் கட்டுப்படுத்தவில்லை;
மாறாக இதயமும் மூளையோடு தொடர்ந்து உரையாடிக்கொண்டே இருக்கிறது என்பதை இந்த ஆய்வு உறுதி செய்துள்ளது. இந்த மறைமுக நரம்பு மண்டலத்தைக் கண்டறிந்ததன் மூலம், வருங்காலத்தில் இதயத் துடிப்புச் சீரின்மை மற்றும் மாரடைப்பு போன்ற நோய்களுக்கான சிகிச்சைகளில் புதிய புரட்சி ஏற்படும் என்று மருத்துவ வல்லுநர்கள் நம்புகின்றனர். மனித உடலின் இந்த விசித்திரமான கட்டமைப்பு பற்றிய கண்டுபிடிப்பு, மருத்துவ அறிவியல் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
மேலும்,அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டு, ஜூலை 2026-ல் ‘செல்’ என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், இந்த நுண்ணிய நரம்பு மண்டலம் மூளையிலிருந்து வரும் சமிக்கைகளை வெறுமனே கடத்துவதற்குப் பதிலாக, இதயத்தின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்த உதவுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.
