அன்றாட வாழ்க்கையில் நாம் சாப்பிடும் சில குறிப்பிட்ட உணவுகள் உடலுக்குப் போதிய ஓய்வைத் தராமல், இரவு நேரத் தூக்கத்தை முற்றிலும் சீர்குலைக்கக் கூடும். செரிமானக் கோளாறுகள், நெஞ்செரிச்சல், வாயுத்தொல்லை மற்றும் அசிடிட்டி போன்ற பாதிப்புகள் ஏற்படுவதுடன், சில உணவுகள் மூளையைத் தேவையின்றிச் சுறுசுறுப்பாக்கித் தூக்கமின்மைக்கு வித்திடுகின்றன.

இதனால் நள்ளிரவில் அடிக்கடி தூக்கம் கலைந்து, காலையில் எழுந்திருக்கும் போது கடுமையான உடல் சோர்வு ஏற்படுகிறது.சத்தான உணவுகளாகக் கருதப்படும் ஆரஞ்சு பழத்தில் அதிக அளவில் சிட்ரிக் அமிலம் நிறைந்துள்ளதால், இரவில் சாப்பிடும்போது நெஞ்செரிச்சல் மற்றும் அசிடிட்டியை உண்டாக்கும். இதேபோல தக்காளியில் இருக்கும் சிட்ரிக் மற்றும் மாலிக் அமிலங்கள் காரணமாக, இரவில் தக்காளி சட்னி அல்லது சாஸ் வகைகளை அதிகமாகச் சேர்த்துக்கொள்வது வயிற்று எரிச்சலைத் தூண்டும்.

உடல் ஆரோக்கியத்திற்குச் சிறந்த புரோக்கோலி மற்றும் காலிஃபிளவர் போன்ற காய்கறிகள் செரிமானம் அடைவதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்வதால், இரவில் சாப்பிடும்போது வயிறு உப்புசம் மற்றும் வாயுத்தொல்லையை ஏற்படுத்துகின்றன.மேலும், டார்க் சாக்லேட்டில் காஃபின் அளவு அதிகமாக இருப்பதால், மூளையை விழித்திருக்கச் செய்து தூக்கம் வருவதில் பெரும் சிக்கலை உண்டாக்கும். பாதாம் மற்றும் முந்திரி போன்ற சத்துமிக்க நட்ஸ் வகைகளில் கொழுப்புச் சத்து அதிகம் என்பதால், இரவில் செரிமானத்தைத் தாமதப்படுத்தி வயிற்றைக் கனமாக உணரச் செய்யும்.

தயிரைப் பொறுத்தவரை கோடைகாலத்திற்கு ஏற்றதாக இருந்தாலும், இரவில் உட்கொள்ளும்போது செரிமான மண்டலம் உணர்திறன் கொண்டவர்களுக்கு அசிடிட்டி மற்றும் வயிறு சார்ந்த பிரச்சனைகளைத் தரும். மேலும், இரவு உணவில் அதிகப்படியான காரம் மற்றும் மசாலாப் பொருட்களைச் சேர்ப்பது வயிற்று எரிச்சலை உண்டாக்கி,நிம்மதியான ஆழ்ந்த உறக்கத்தைப் பற்றிக் கெடுத்துவிடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.