மனிதர்களின் உடலானது 40 வயதைக் கடந்த பிறகு பல்வேறு ஹார்மோன் மாற்றங்கள், செரிமானக் குறைபாடுகள் மற்றும் வளர்சிதை மாற்றப் பிரச்சினைகளைச் சந்திக்கத் தொடங்குகிறது. குறிப்பாக, பெண்களுக்கு 40 வயதுக்கு மேல் இயல்பாகவே உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் என்பதால், அவர்கள் தங்களின் உணவுப் பழக்கம், தூக்கம் மற்றும் தினசரி உடற்பயிற்சிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமாகிறது.
வாகனங்களின் உதிரி பாகங்களை எளிதில் மாற்றிவிடுவது போல மனித உறுப்புகளை மாற்ற முடியாது என்பதால், 40 வயதைக் கடந்தவர்கள் தங்களின் உடல் ஆரோக்கியத்தைப் பேண சில எளிய பழக்கவழக்கங்களைப் பின்பற்ற வேண்டும் என நிபுணர்கள் வழிகாட்டுகின்றனர்.தினசரி உணவில் அதிகளவில் காய்கறிகள், பெர்ரி, ஆப்பிள் போன்ற குறைந்த கலோரி கொண்ட பழங்கள் மற்றும் புரதச்சத்து நிறைந்த பருப்பு வகைகளைச் சேர்த்துக் கொள்வது ஊட்டச்சத்து குறைபாட்டைத் தடுக்கும்.
மேலும், துரித உணவுகள், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, மைதா மற்றும் சோடா பானங்களைத் தவிர்த்து, ஆலிவ் எண்ணெய் அல்லது நெய் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகளைச் சமையலில் பயன்படுத்துவது நல்லது. உணவு உண்ணும்போது அவசரப்படாமல் அமர்ந்து நன்கு மென்று சாப்பிட வேண்டும் என்றும், இரவில் குறைந்த அளவிலான உணவை உட்கொண்டு சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு உப்பின் அளவைக் குறைப்பது செரிமானத்தை மேம்படுத்தும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
உடல் எடையைச் சீராக பராமரிக்க தினமும் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி, மிதமான நடைப்பயிற்சி மற்றும் யோகா அல்லது தியானம் செய்வது மன அழுத்தத்தைக் குறைத்து ஹார்மோன்களைச் சமநிலையில் வைக்க உதவும். ஒரே மாதிரியான பயிற்சிகளைச் செய்யாமல் கார்டியோ மற்றும் எடைகளைத் தூக்கும் வலிமைப் பயிற்சிகளை மாற்றி மாற்றிச் செய்வது தசை இழப்பைத் தடுக்கும். அதோடு, தினமும் 6 முதல் 8 மணி நேர நிம்மதியான தூக்கம், போதிய அளவு நீர் அருந்துதல் மற்றும் கிரீன் டீ போன்றவற்றை வழக்கமாக்கிக் கொள்வது உடலின் கழிவுகளை வெளியேற்றித் தொப்பையைக் குறைக்க வழிவகுக்கும்.
முறையான நேர அட்டவணையைப் பின்பற்றி காலை உணவைத் தவிர்க்காமல் உண்பதும், தைராய்டு போன்ற பரிசோதனைகளை குறிப்பிட்ட இடைவெளியில் மேற்கொள்வதும் உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க உதவும். அதிகப்படியான உடற்பயிற்சிகளையோ அல்லது உடனடி எடை குறைப்பு முறைகளையோ பின்பற்றாமல், நிதானமாக ஆரோக்கியமான வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுப்பதே 40 வயதிலும் இளமையையும் சுறுசுறுப்பையும் தக்கவைக்க உதவும் சிறந்த வழிமுறையாகும்.
