மத்தியப்பிரதேச மாநிலம் பண்ணா மாவட்டத்தில், குடிபோதையில் இருந்த நபர் ஒருவர் காவல்துறையின் ரோந்து வாகனத்தையே திருடிக்கொண்டு அதிவேகமாக ஓட்டிச் சென்று பல இருசக்கர வாகனங்கள் மீது மோதி பெரும் விபத்தை ஏற்படுத்திய சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மதுவின் போதையில் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல், காவல் துறையினரின் வாகனத்தையே குறிவைத்துத் திருடிய அந்த நபரின் செயல், அப்பகுதி மக்களின் பாதுகாப்பை முற்றிலும் கேள்விக்குறியாக்கியுள்ளது. சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்க வேண்டிய காவல் வாகனமே, ஒரு குடிகாரனின் கையிலகப்பட்டுச் சாலையில் சென்ற மனிதர்களின் உயிர்களுக்கு ஆபத்தாக மாறியது பெரும் அதிர்வலையை உருவாக்கியுள்ளது.

போதையில் வாகனத்தை எடுத்த அந்த நபர், வீதிகளில் அசுர வேகத்தில் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார். கட்டுப்பாட்டை இழந்த அந்தப் போலீஸ் வாகனம், சாலையில் சென்று கொண்டிருந்த பல இருசக்கர வாகனங்கள் மீது அடுத்தடுத்து பயங்கரமாக மோதியது.

இதில் பல வாகனங்கள் சேதமடைந்ததோடு, அதில் பயணித்தவர்களும் காயமடைந்தனர். பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு நாலாபுறமும் ஓடிய நிலையில், கண்இமைக்கும் நேரத்தில் நடந்த இந்தத் தொடர் விபத்துக்கள் அந்தப் பகுதியையே போர்க்களம் போல மாற்றியது.

சம்பவ இடத்திலிருந்த பொதுமக்கள் மற்றும் காவலர்கள் உடனடியாகச் செயல்பட்டு, அந்த போதை ஆசாமியைத் துரத்திப் பிடித்துக் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்தச் அதிர்ச்சி சம்பவத்தின் காட்சிகள் அனைத்தும் வீடியோவாகப் பதிவாகி, தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

காவல் துறை வாகனத்தையே திருடும் அளவுக்குப் பாதுகாப்பு எந்த லட்சணத்தில் இருக்கிறது என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், போதை ஆசாமி மீது கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

“>