அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடர்களில் சந்தித்த படுதோல்விகளால் கடுமையான விமர்சனங்களையும் கோபத்தையும் எதிர்கொண்ட இந்திய அணி, தற்போது ஜிம்பாப்பேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றி தனது முந்தைய தோல்விகளுக்கான காயங்களுக்கு மருந்திட்டுள்ளது. நடப்பு டி20 உலக சாம்பியனான இந்திய அணி, ஹராரேவில் நடைபெற்ற ஜிம்பாப்பே அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று தொடரை முழுமையாகக் கைப்பற்றியுள்ளது. குறிப்பாக கடந்த ஜூலை 25 அன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 90 ரன்கள் என்ற மிகப்பெரிய வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா, 219 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. அணியின் இந்த எழுச்சிக்குக் காரணமாக அமைந்தவர்கள் அனைவரின் விமர்சனங்களுக்கும் ஆளாகி வந்த இஷான் கிஷன் மற்றும் திலக் வர்மா தான்.
இரண்டாவது போட்டியில் தொடக்கத்திலேயே 29 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. அந்த இக்கட்டான சூழலில் களமிறங்கிய இஷான் கிஷன், சற்றும் அழுத்தத்திற்கு ஆளாகாமல் எதிர் தாக்குதல் நடத்தும் உத்தியைக் கையாண்டு ஜிம்பாப்பே பந்துவீச்சாளர்களைச் நாலாபுறமும் சிதறடித்தார். வெறும் 44 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் உட்பட 81 ரன்களைக் குவித்து அவர் ஆட்டமிழந்தார். இஷானைத் தொடர்ந்து களமிறங்கிய துணைக்கேப்டன் திலக் வர்மாவின் மீதும் கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. ஆனால், ஐந்தாவது வரிசையில் இறங்கிய அவர், எதிரணிக்குச் சிறிதும் வாய்ப்பளிக்காமல் வெறும் 29 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களுடன் 60 ரன்களை விளாசி ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். இவர்களின் இந்தச் சூறாவளிப் பார்ட்னர்ஷிப் தான் இந்திய அணியின் ஸ்கோரை 219 ரன்களாக உயர்த்தி, ஜிம்பாப்பே அணியின் எட்டாக்கனியாக மாற்றியது.
இந்தத் தொடர் அணிக்கு மட்டுமல்லாமல், தனிப்பட்ட முறையில் இஷான் கிஷன் மற்றும் திலக் வர்மா ஆகிய இருவருக்கும் மிக முக்கியமானதொரு திருப்புமுனையாக அமைந்துள்ளது. முதல் போட்டியில் திலக் வர்மாவுக்கு பேட்டிங் செய்யும் வாய்ப்பு பெரிதாகக் கிடைக்கவில்லை என்றாலும், இஷான் கிஷன் தனது பங்கைச் சிறப்பாகச் செய்திருந்தார். தொடக்க வீரர் அபிஷேக் சர்மா சீக்கிரமே ஆட்டமிழந்த நிலையில், மறுமுனையில் 18 பந்துகளில் அரைசதம் அடித்து உலக சாதனை படைத்த இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு இஷான் சிறந்த உறுதுணையாக விளங்கினார். அந்தப் போட்டியிலும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இஷான் 24 பந்துகளில் 35 ரன்கள் குவித்து, கேப்டன் ஐயருடன் இணைந்து 46 ரன்களின் மிக முக்கியமான பார்ட்னர்ஷிப்பை அமைத்து அணியை வெற்றியின் பாதைக்கு அழைத்துச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
