ஹராரேவில் நடைபெற்ற இந்தியா மற்றும் ஜிம்பாப்பே அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டியில், 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தனது அபாரமான பேட்டிங் மூலம் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளார். ஜிம்பாப்பே அணியின் கேப்டனும் அனுபவமிக்க ஆல்ரவுண்டருமான சிக்கந்தர் ராசாவின் பந்துவீச்சில், வைபவ் சூர்யவன்ஷி விளாசிய மாபெரும் 102 மீட்டர் சிக்சர் கிரிக்கெட் உலகத்தின் கவனத்தை மொத்தமாக ஈர்த்துள்ளது. எதிரணி கேப்டனையே திணறடித்த இந்த அசுரத்தனமான சிக்சரால் பந்து ஸ்டேடியத்தின் கூரை மீது போய் விழுந்தது, பார்வையாளர்களையும் வீரர்களையும் ஒருசேர வியப்பில் ஆழ்த்தியது.

இந்திய இன்னிங்ஸின் 13-வது ஓவரில் இந்தச் சுவாரசியமான சம்பவம் அரங்கேறியது. பேட்ஸ்மேன் இறங்கி வந்து அடிப்பதை முன்கூட்டியே யூகித்த சிக்கந்தர் ராசா, தனது பந்தின் நீளத்தை சாமர்த்தியமாகச் சுருக்கினார். இருப்பினும், அதற்கேற்ப நொடியில் தன்னை மாற்றிக் கொண்ட வைபவ் சூர்யவன்ஷி, அசாத்தியமான கூர்மையுடன் பந்தைப் பவுலரின் தலைக்கு மேல் பறக்கவிட்டு சிக்சர் மூலமாகப் பதிலடி கொடுத்தார். பந்துவீச்சாளரின் தந்திரமான மூளையைத் தனது மின்னல் வேக அட்ஜெஸ்ட்மென்ட் மற்றும் சுத்தமான பேட் ஸ்விங் மூலம் வைபவ் சுக்குநூறாக உடைத்த இந்த ஷாட், இந்தப் போட்டியின் மிகச்சிறந்த தருணமாக மாறியது. தற்போது சமூக வலைதளங்களில் இந்த சிக்சர் வீடியோ காட்டுத் தீ போல பரவி வருகிறது.

 


தொடர்ந்து அபாரமாக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி, சதத்தை நெருங்கும் வாய்ப்பை மிக  தவறவிட்டாலும், ஆட்டத்தில் அருமையாக விளையாடி 81 ரன்களைக் குவித்து அசத்தினார். இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோருடன் இணைந்து மதிப்புமிக்க கூட்டாண்மைகளை உருவாக்கிய அவர், அணியின் ஸ்கோர் உயர்வுக்கு வித்திட்டார். வெறும் 31 பந்துகளில் தனது அரைசதத்தைக் கடந்த அவர், தனது பலம் வாய்ந்த அடியுடன் நேர்த்தியான டச் ஷாட்டுகளையும் வெளிப்படுத்தினார்.

சதம் அடிக்கும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்ட போதிலும், இந்த இன்னிங்ஸின் மூலம் வைபவ் தனது பெயரில் புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளார். தனது 16 வது பிறந்தநாளை எட்டுவதற்கு முன்பே டி20 சர்வதேசப் போட்டிகளில் இரண்டு அரைசதங்களைக் கடந்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதன் மூலம் நேபாளத்தின் குஷல் புர்தேலின் சாதனையை அவர் முறியடித்துள்ளார். ஏற்கனவே தொடரின் ஆரம்பத்தில் 18 பந்துகளில் அரைசதம் அடித்து உலக சாதனை படைத்திருந்த வைபவ், தற்போது இந்த 81 ரன்களின் மூலம் தனது வளர்ந்து வரும் புகழை மேலும் உயர்த்திக் கொண்டுள்ளார். மேலும் இந்த போட்டியில் 5 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 192 ரன்கள் எடுத்துள்ள நிலையில் தற்போது ஜிம்பாவே அணிக்கு 193 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது..