விளையாட்டு உலகில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி என்றாலே உலகளவில் இருக்கும் அனைத்து விளையாட்டு ரசிகர்களுக்கும் எப்போதுமே ஆர்வம் தொற்றிக்கொள்ளும். “கிரிக்கெட்டில் மட்டும்தான் இந்தியா ஆதிக்கம் செலுத்துமா?” என்று கேள்வி எழுப்பிய எதிரணியினரின் கன்னத்தில் அறைந்தது போல், ஹாக்கி மைதானத்திலும் தங்களது அசுரத்தனமான ஆதிக்கத்தை நிருபித்து காட்டியுள்ளனர் இந்திய இளம் சிங்கங்கள்.

ஓமன் நாட்டின் மஸ்கட் நகரில் நடைபெற்ற FIH யூத் ஹாக்கி5ஸ் ஆசிய சாம்பியன்ஷிப் 2026 (FIH Youth Hockey5s Asian Championship) தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் நேருக்கு நேர் மோதின. ​ரசிகர்களின் உச்சகட்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்தப் பரபரப்பான இறுதிப்போட்டியில், ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய இந்தியாவின் சப்-ஜூனியர் ஆடவர் அணி, பாகிஸ்தானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.

இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோமித் பால், கேப்டன் கேத்தன் குஷ்வாஹா மற்றும் ஷாருக் அலி ஆகிய மூவரும் தலா ஒரு கோல் அடித்து பாகிஸ்தான் அணியின் வெற்றி கனவை மைதானத்திலேயே சுக்குநூறாக உடைத்தெறிந்தனர். ​இத்தொடர் முழுவதும் ஆடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று, ஒரு போட்டியில் கூட தோல்வியடையாத ‘அன்பீட்டன்’ (Unbeaten) சாம்பியனாக உருவெடுத்துள்ளது இந்திய அணி.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியின் மூலம் முதன்முதலாக நடைபெறவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க FIH யூத் ஹாக்கி5ஸ் உலகக் கோப்பைத் தொடருக்கும் (FIH Youth Hockey5s World Cup) நேரடியாகத் தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது. பாகிஸ்தானை தும்சம் செய்து ஆசிய கோப்பையைக் கைப்பற்றிய இந்திய இளம் வீரர்களுக்கு தற்போது சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.