உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் நகரில் உள்ள சகேரி பகுதியில் அமைந்துள்ள ஒரு  திருமண மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடந்து கொண்டிருந்தது. அந்தச் சமயத்தில் சாஹனா ஹசன் என்ற பெண் திடீரென காவல்துறையினருடன் திருமண மண்டபத்திற்குள் அதிரடியாக நுழைந்தார். நேராக மேடைக்குச் சென்ற அவர், அங்கு மணமகனுடன் அமர்ந்திருந்த புதுப்பெண்ணின் முன்பு நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேடையில் இருந்த மணமகனைச் சுட்டிக் காட்டிய அந்தப் பெண், தனக்கு விவாகரத்து வழங்காமலேயே இவர் இரண்டாவது திருமணம் செய்ய முயல்வதாகக் குற்றம் சாட்டியதுடன், தான் தான் இவரின் முதல் மனைவி என்றும் ஆவேசமாகக் கூறினார்.

இதுகுறித்து விரிவாகப் பேசிய சாஹனா, கடந்த 2022-ஆம் ஆண்டு பேஸ்புக் மூலம் தனக்கும் ஆசிப் முகமது என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் அது காதலாக மாறியதாகத் தெரிவித்தார். இரு வீட்டார் சம்மதத்துடன் பாரம்பரிய முறைப்படி இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும், கடந்த 2024-ஆம் ஆண்டில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு குடும்பப் பிரச்சினைகள் வெடித்துள்ளன. இந்தச் சூழலில் ஏற்பட்ட மோதல்கள் நீதிமன்றம் வரை சென்றது. சாஹனா கணவர் மீது வழக்குத் தொடர்ந்த நிலையில், கணவர் ஆசிப் தம்பதியர் சேர்ந்து வாழ வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்தச் சட்டப் போராட்டம் இன்னும் நிலுவையில் உள்ள நிலையில்தான் இந்த அதிரடிச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போதே, ஆசிப் தனக்குத் தெரியாமல் மற்றொரு திருமணம் செய்துகொண்டு வரவேற்பு நிகழ்ச்சி நடத்தி வருவதாக அண்டை வீட்டார் மூலம் சாஹனாவிற்குத் தகவல் கிடைத்தது. இதனைக் கேட்டு அதிர்ந்துபோன அவர், உண்மையை நேரில் கண்டறியக் காவல்துறை உதவியுடன் உடனடியாகத் திருமண மண்டபத்திற்கு விரைந்து சென்றுள்ளார். அங்கிருந்த விருந்தினர்கள் மற்றும் காவலர்கள் முன்னிலையில் மணமேடைக்குச் சென்று புதுப்பெண்ணிடம், “நான் யார் என்று உனக்குத் தெரியுமா? நான் தான் இவரின் முதல் மனைவி; எங்களுக்கு இன்னும் விவாகரத்து ஆகவில்லை, இந்தத் திருமணத்தை நான் எப்படியும் நடக்க விட மாட்டேன்” என்று அவர் மிரட்டும் வகையில் கூறிய வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாய் பரவி வருகின்றன.

மேடையில் இந்த அதிரடித் திருப்பமும் கடுமையான வாக்குவாதமும் வெடித்ததைக் கண்ட மாப்பிள்ளை ஆசிப் முகமது, அங்கிருந்து நைசாகத் தப்பியோட முயன்றதாகக் கூறப்படுகிறது. உடனடியாக உஷாரடைந்த காவல்துறையினர் தலையிட்டு, தப்பியோட முயன்ற ஆசிப்பை மடக்கிப் பிடித்து விசாரணைக்காக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது நடைபெற்ற இந்தச் இரண்டாவது திருமண முயற்சி மற்றும் முறைகேடுகள் குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.