ஒரு பக்கம் நாடு நவீன தொழில்நுட்பத்திலும் உள்கட்டமைப்பிலும் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருவதாகப் பேசப்பட்டாலும், கிராமப்புறங்களில் அடிப்படைச் சாலை வசதி கூட இல்லாத அவல நிலை இன்னமும் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஜார்கண்ட் மாநிலம், கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள துமாரியா பகுதியில் அடிப்படைச் சாலை வசதி இல்லாத காரணத்தால், நோயாளி ஒருவரைக் கட்டிலில் சுமந்து கொண்டு மருத்துவமனைக்குச் சென்ற சோகச் சம்பவம் மீண்டும் ஒருமுறை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துமாரியா பகுதியைச் சேர்ந்த இந்த கிராமத்தில் அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நேரத்தில் கூட, ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் வந்து செல்ல முடியாத அளவிற்குப் பாதை மிக மோசமாக உள்ளது. சம்பவத்தன்று கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்பட்ட நிலையில், வாகனப் போக்குவரத்து வசதி இல்லாததால், கிராம மக்கள் வேறு வழியின்றி அந்த நோயாளியைக் கட்டிலில் படுக்கவைத்து, தோளில் சுமந்தபடி மைல் கணக்கில் நடந்து செல்ல நேரிட்டது.
ஆபத்தான நிலையில் இருக்கும் நோயாளியைக் காப்பற்ற, கிராம மக்கள் கரடுமுரடான பாறைப் பாதைகளிலும் மேடு பள்ளங்களிலும் அரும்பாடுபட்டுச் சுமந்து செல்லும் இந்தக் காட்சிகள் பார்ப்போரின் நெஞ்சைக் கலங்க வைப்பதாக உள்ளது. பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் அடிப்படைச் சாலை வசதி கோரி அதிகாரிகளிடம் முறையிட்டும், இதுவரை எந்தவொரு உரிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், ஒவ்வொரு முறை யாராவது நோய்வாய்ப்படும் போதும் இதே போராட்டம்தான் தொடர்வதாகவும் கிராமவாசிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. மனித உயிர்களுடன் விளையாடும் இந்த அவல நிலைக்கு அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், துமாரியா பகுதியில் விரைவாகச் சாலை வசதி அமைத்துத் தர வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
