சர்க்கரை நோய் என்பது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை உயர்த்துவதோடு நின்றுவிடுவதில்லை; அது உடலில் உள்ள பல உறுப்புகளையும் படிப்படியாகப் பாதிக்கக்கூடியது. இதில் குறிப்பாக, பலரும் கவனிக்கத் தவறும் அதே நேரத்தில் மிகக் கவனமாகப் பராமரிக்க வேண்டிய ஒன்று நமது பாதங்கள் ஆகும். சர்க்கரை நோயாளிகள் தங்களின் பாதங்களை ஏன் தினமும் பராமரிக்க வேண்டும், அதன் பின்னணியில் உள்ள முக்கிய காரணங்கள் என்ன என்பதைப் பற்றி இங்கு விரிவாகப் பார்ப்போம்.
சர்க்கரை நோய் நீண்ட நாட்களாகக் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருக்கும்போது, அது நரம்புகளைப் பாதித்து உணர்ச்சித் திறனைக் குறைக்கிறது . இதனால் பாதங்களில் வெட்டுக்காயங்களோ, கொப்புளங்களோ அல்லது ஆணியோ ஏற்பட்டால்க்கூட, வலி உணர்வு இல்லாததால் நோயாளிகளால் உடனடியாக அதை உணர முடியாது. சிறிய காயமாகத் தொடங்கும் இது, கவனிக்கப்படாமல் விடும்போது பெரிய புண்ணாக மாறி, ஆறாத நிலையை அடைகிறது.
மேலும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும்போது, பாதங்களுக்குச் செல்லும் ரத்த ஓட்டமும் வெகுவாகக் குறைகிறது. இயல்பான ரத்த ஓட்டம் இல்லாததால், காயம் ஏற்பட்ட இடத்தில் கிருமித் தொற்று வேகமாகப் பரவுகிறது. மிகக் கடுமையான நிலைகளில், இந்தத் தொற்று எலும்பு வரை பரவி, பாதத்தையோ அல்லது காலையோ துண்டிக்கும் நிலைக்குக்கூட கொண்டு சென்றுவிடும் அபாயம் உள்ளது.
எனவே, சர்க்கரை நோயாளிகள் தினமும் தங்களது பாதங்களை வெதுவெதுப்பான நீரால் கழுவி, காய வைத்து, ஏதேனும் காயம் அல்லது நிற மாற்றம் உள்ளதா என்று பரிசோதிக்க வேண்டும். சரியான அளவுள்ள காலணிகளை அணிவதும், பாதங்களில் காயம் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதும் மிக அவசியம். சிறிய காயம் தென்பட்டாலும் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது, கால்களைப் பாதுகாத்து ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வழிவகுக்கும்.
