இந்தியாவில் திருமணத்திற்குப் பிறகு விரைவாகக் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற சமூக அழுத்தம் தம்பதிகளுக்கு பெரும் மன உளைச்சலைத் தருகிறது. உறவினர்களின் கேள்விகள் மற்றும் சமுதாயத்தின் பார்வை காரணமாக, குழந்தைப்பேறு தள்ளிப்போகும் தம்பதிகள் இயற்கை வழியைத் தாண்டி செயற்கைக் கருத்தரித்தல் (IVF) மையங்களை நாட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு ஐவிஎஃப் சிகிச்சைக்காகச் செல்லும் 10 தம்பதிகளில் 9 பேர் கடுமையான கடன் சுமையில் சிக்குவதாகச் சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. இந்தியாவில் ஒரு முறை ஐவிஎஃப் சிகிச்சை செய்ய அரசு மருத்துவமனைகளில் சராசரியாக 1.1 லட்ச ரூபாயும், தனியார் மருத்துவமனைகளில் 2.30 லட்ச ரூபாயும் செலவாகிறது. சிகிச்சை பெறுபவர்களில் வெறும் 5 சதவீதத்தினரிடம் மட்டுமே மருத்துவக் காப்பீடு இருப்பதால், பாதிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடன் வாங்கியே சிகிச்சை பெறுகின்றன.
இந்த மருத்துவச் செலவுகளால் நிதி நெருக்கடி ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், தம்பதிகள் தீவிர மன அழுத்தம், கவலை போன்ற உடல் மற்றும் மனரீதியான பாதிப்புகளுக்கும் ஆளாகிறார்கள். பணச் சுமையால் அவர்களின் இயல்பு வாழ்க்கைத் தரமும் கணிசமாகக் குறைகிறது.
எனவே தம்பதிகளின் சுமையைக் குறைக்க, மத்திய அரசின் ‘பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா’ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஐவிஎஃப் சிகிச்சையையும் சேர்க்க வேண்டும் என ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர். இத்திட்டத்தின் மூலம் ஒரு ஐவிஎஃப் சுழற்சிக்கு 81,332 ரூபாய் வரை நிதி உதவி வழங்கினால், எளிய மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு அது பெரும் உதவியாக இருக்கும் என்றும் அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.
