கர்ப்ப பரிசோதனை நேர்மறையாக வந்தவுடன், ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும் அதே நேரத்தில் பொறுப்பும் தொற்றிக்கொள்கிறது. கர்ப்ப காலத்தின் முதல் மூன்று மாதங்கள் மிகவும் உணர்வுப்பூர்வமானவை மற்றும் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டமாகும். இந்தச் சமயத்தில் தாயின் உணவுப் பழக்கத்தில் ஏற்படும் சிறிய அலட்சியமும் கூட கருவின் வளர்ச்சியைப் பாதிக்கக்கூடும் என்பதால், சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்பது மிகவும் அவசியமாகும்.
பரிசோதனை பாசிட்டிவ் வந்தவுடனேயே ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பச்சை இலைக் காய்கறிகள், ஃபோலிக் அமிலம் நிறைந்த உணவுகள், பழங்கள், தானியங்கள் மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்வது குழந்தையின் ஆரம்பகால மூளை மற்றும் உடல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. மேலும், மருத்துவரின் ஆலோசனையோடு தேவையான வைட்டமின் மாத்திரைகளையும் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதே நேரத்தில், கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்தும் பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். முழுமையாக வேகவைக்கப்படாத உணவுகள், பப்பாளி, அன்னாசிப்பழம், அதிக காரம் மற்றும் எண்ணெய் பலகாரங்கள், அதிக அளவிலான காஃபின் (காபி, டீ) மற்றும் பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். உணவில் செய்யப்படும் சிறிய தவறுகள்கூட அஜீரணம், வயிற்றுப்போக்கு அல்லது கடுமையான உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்திவிடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
எனவே, கர்ப்ப பரிசோதனை பாசிட்டிவ் ஆன முதல் நாளிலிருந்தே ஆரோக்கியமான வாழ்வியலைப் பின்பற்றத் தொடங்குவது அவசியமாகும். ஏதேனும் உணவைப் பற்றி சந்தேகம் இருந்தால், சுயமாக முடிவெடுக்காமல் உடனடியாகப் மகப்பேறு மருத்துவரை அணுகி, உங்களுக்கான சரியான உணவு அட்டவணையைப் பெற்றுப் பின்பற்றுவதே தாய்க்கும் சேய்க்கும் பாதுகாப்பானதாகும்.
