இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத் பகுதியைச் சேர்ந்த 32 வயதான சோனியா எக்செல்பி என்ற இசை ஆசிரியை, கடுமையான மன அழுத்தம் காரணமாக இணையம் மூலம் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நபரிடம் பழகி வந்துள்ளார். தன்னைத் சித்திரவதை செய்து கொடூரமாகக் கொலை செய்ய வேண்டும் என்பதற்காக, அந்த அமெரிக்க நபருக்கு அவர் 4,000 டாலர்களைப் (இந்திய மதிப்பில் சுமார் 33 லட்சம் ரூபாய்) கொடுத்துள்ளார். இந்த விபரீத முடிவு இறுதியில் அவரது உயிரையே பறித்துள்ளது.

நீதிமன்ற விசாரணையில் வெளிவந்துள்ள தகவலின்படி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சோனியா லண்டனில் இருந்து அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திற்குச் சென்றுள்ளார். அங்குள்ள ஒரு தங்கும் விடுதியில் அந்த நபர் சோனியாவைத் தன் கட்டுப்பாட்டில் வைத்தபோது, சோனியாவுக்குத் தான் செய்த தவறு தாமதமாகப் புரிந்துள்ளது. உடனே தனது தோழிக்கு “அவன் என்னை விடுவிக்க மறுக்கிறான், இங்கிருந்து தப்பிக்க வழியே இல்லை, நான் பெரிய தவறு செய்துவிட்டேன்” என்று ரகசியமாகச் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். ஆனால், அதற்குள் எல்லாமே கைமீறிச் சென்றுவிட்டது.

சோனியா இங்கிலாந்துக்குத் திரும்பாததால் அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் நடத்திய தீவிர தேடுதலில், புளோரிடாவின் காட்டுப் பகுதியில் சோனியா பலமுறை கத்தரிக்கோலால் அல்லது கத்தியால் குத்தப்பட்டு, ஆழமற்ற குழியில் கொடூரமான முறையில் புதைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சோனியாவின் வங்கி அட்டைகளைப் பயன்படுத்திப் பணத்தைத் திருட முயன்ற 53 வயதான கொலையாளி டுவைனை அமெரிக்கக் காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட டுவைன் மீது கடத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை ஆகிய கடுமையான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்கொலை செய்துகொள்ளும் நோக்கில் விசித்திரமான இணையதளம் மூலம் அந்நிய நபரைத் தொடர்புகொண்டு பணத்தைக் கொடுத்து உயிரைவிட்ட இங்கிலாந்து ஆசிரியையின் சோகமான சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.