இன்றைய நவீன டிஜிட்டல் காலத்தில் குழந்தைகள் பெரும்பாலான நேரத்தைச் செல்போன்களிலும் கேம்களிலுமே செலவிட்டு வரும் சூழலில், கேரளா மாநிலத்தைச் சேர்ந்த லெவின் பாலினோஸ்  என்ற சிறுவன் வீணாகத் தூக்கி எறியப்படும் மின்னணுப் பொருட்களைக் கொண்டு, அதிநவீன ரோபோக்களை உருவாக்கி உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த இந்தச் சிறுவன், தனது அசாத்திய தொழில் நுட்பத் திறமையால் இணையதளங்களில் தற்போது வைரல் நாயகனாக அவதரித்துள்ளார்.

பொதுவாகக் குழந்தைகள் விளையாட்டில் மூழ்கியிருக்கும் பருவத்தில், லெவின் பாலினோஸ் பழைய எலக்ட்ரானிக் கழிவுகள், பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் வீணான உதிரி பாகங்களைச் சேகரிப்பதையே தனது பொழுதுபோக்காகக் கொண்டுள்ளார். கழிவுப் பொருட்கள் தானே என்று அலட்சியப்படுத்தாமல், அவற்றை முறைப்படுத்தி, தன் சிந்தனையால் உயிரூட்டி தானியங்கி முறையில் இயங்கக்கூடிய பல வகையான ரோபோக்கள், கார்கள் மற்றும் நவீன தொழில்நுட்பச் சாதனங்களை அவர் உருவாக்கியுள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by levin paulose (@ppv931680)

கேரளாவைச் சேர்ந்த லெவின் பாலினோஸ் தான் உருவாக்கிய பல்வேறு வகையான ரோபோடிக் சாதனங்களை இயக்கிச் செயல்முறை விளக்கம் அளிக்கும் காணொளி  ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது காட்டுத்தீ போல் பரவி வருகிறது. கழிவுப் பொருட்களைச் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத வகையில் பயனுள்ள சாதனங்களாக மாற்றும் இந்தச் சிறுவனின் சுழற்சி முறையிலான  முயற்சியையும், அபார மூளையையும் இணையவாசிகள் வியந்து பாராட்டி வருகின்றனர்.

சிறுவன் லெவின் பாலினோஸின் இந்த அசாத்திய திறமையைப் பாராட்டி வரும் நெட்டிசன்கள், எதிர்காலத்தில் இவர் மிகப்பெரிய பொறியாளராகவும்  உலகப் புகழ் பெற்ற கண்டுபிடிப்பாளராகவும் உருவெடுப்பார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை எனத் தெரிவித்து வருகின்றனர். வீணான கழிவுகளிலிருந்தும் பயனுள்ள கண்டுபிடிப்புகளை உருவாக்க முடியும் என்பதற்குச் சான்றாக விளங்கும் லெவினின் இந்தச் சாதனை, பல இளம் தலைமுறையினருக்குச் சிறந்த ஊக்கமாக அமைந்துள்ளது.