திருவண்ணாமலை என்றதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது அண்ணாமலையாரும் 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையும்தான். தொடர்ந்து இரண்டு முறை மாடிப்படி ஏறி இறங்கினாலே உடல் உழைப்பும் சோர்வும் அதிகரிக்கும் நிலையில், நீண்ட தூரம் நடக்கும் கிரிவலப் பாதையில் பக்தர்களின் உடல் சோர்வைப் போக்க ஒரு சிறப்புத் தலம் உள்ளது. அஷ்ட லிங்கங்களில் ஒன்றான குபேர லிங்கத்திற்கு அருகில் அமைந்திருக்கும் ‘இடுக்கு பிள்ளையார்’ கோவில், அளவில் மிகச் சிறியதாக இருந்தாலும் ஆன்மீக ரீதியாகவும் ஆரோக்கிய ரீதியாகவும் மிகப் பெரிய மகத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

சிறிய குகை போன்ற அமைப்பைக் கொண்ட இந்த கோவிலுக்கு மூன்று வாசல்கள் உள்ளன. முன்புறம் நந்தியும் பின்புறம் விநாயகரும் எழுந்தருளியுள்ளனர். கிரிவலம் வரும் பக்தர்கள் கோவிலின் பின்வாசல் வழியாக ஒருக்களித்துப் படுத்தவாறு மெதுவாகக் கையால் நகர்ந்து, முன்வாசல் வழியாக வெளியே வர வேண்டும். வெளியே வரும்போது நந்தி சிலை மீது முட்டுவது போல் தோன்றினாலும், சரியாக நந்தியைத் தொட்டு வணங்கி எழுந்து நிற்கும் வசதி உள்ளது. முதலில் இது ஒரு சாதாரண விஷயமாகத் தோன்றினாலும், உடலை வளைத்து வெளியே வரும்போது அக்குபஞ்சர் முறையில் உடலின் ரத்த ஓட்டம் சீராகி, நீண்ட தூர நடைப்பயணத்தால் ஏற்படும் உடல் வலி மற்றும் சோர்வு அனைத்தும் உடனடியாக நீங்கிவிடுகிறது.

இந்த இடுக்கு பிள்ளையார் கோவிலின் வழியே உடல் பருமனானவர்களும் கூட மிக எளிதாக வந்துவிடலாம் என்பது இதன் கூடுதலான சிறப்பு அம்சமாகும். ஆன்மீக நம்பிக்கை மட்டுமின்றி உடலுக்குப் புத்துணர்ச்சி தரும் ஒரு சிறந்த வழிமுறையாகவும் இது பார்க்கப்படுகிறது. இதனால் திருவண்ணாமலைக்குக் கிரிவலம் வரும் பெரும்பாலான பக்தர்கள், இந்த இடுக்கு பிள்ளையார் கோவிலுக்கு வந்து வழிபாட்டைச் செய்துவிட்டுத் தங்கள் கிரிவலத்தைத் தொடர்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இருப்பினும், இந்த வழிபாட்டு முறையைப் பின்பற்றும் போது பக்தர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். சமீபத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்த இடுக்கில் நுழைந்தபோது எதிர்பாராதவிதமாகச் சிக்கி உயிரிழந்த சம்பவமும், மேலும் சிலர் இடுக்கில் சிக்கிப் பல போராட்டங்களுக்குப் பிறகே மீட்கப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. எனவே, பக்தர்கள் தங்களின் உடல் அமைப்பைக் கருத்தில் கொண்டும், சரியான பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றியும் எச்சரிக்கையுடன் இந்த வழிபாட்டை மேற்கொள்வது அவசியமாகும்.