திருமணத் தடைகளை நீக்கி, நன்மைகளைத் தரக்கூடிய மிகச் சக்திவாய்ந்த வழிபாடாக ஆடி செவ்வாய் வழிபாடு கருதப்படுகிறது. நவகிரகங்களில் செவ்வாய் பகவானோடு நேரடித் தொடர்புடையவர் ஸ்ரீ முருகப்பெருமான் என்பதால், செவ்வாய்க்கிழமை விரதம் அவருக்கு மிகவும் உகந்ததாக உள்ளது.
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அல்லது திருமணத் தடையால் அவதிப்படுபவர்கள், செவ்வாய்க்கிழமை நாளில் முருகப்பெருமானை வழிபட்டு விரதம் இருப்பது அவர்களின் வாழ்க்கையில் உள்ள தடைகளை அகற்றி, நல்ல பலன்களைத் தரும் என்பது நம்பிக்கை. செவ்வாய் கிரகத்திற்கும் முருகனுக்கும் மட்டுமல்லாமல், பூமிக்கும் முருகப்பெருமானுக்குமிடையே ஆழமான ஆன்மீகத் தொடர்பு உண்டு.
இதன் காரணத்தினாலேயே பூமியில் நாம் செவ்வாயின் அம்சமாக முருகப்பெருமானைக் கருதி வழிபடுகிறோம். ஆடிச் செவ்வாய்க்கிழமைகளில் முருகன் தலங்களுக்குச் சென்று இரவு தங்கி, ஒரு நாள் விரதமிருந்து, முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து பூஜித்தால், நாம் நினைத்த காரியங்கள் தடையின்றி நடக்கும். ஆடிச் செவ்வாயன்று அதிகாலையிலேயே தலைக்குக் குளித்துவிட்டு, வீட்டின் வாசலில் அழகான கோலமிட்டு, பூஜையறையில் குத்துவிளக்கேற்றி அம்மனை வழிபடுவது குடும்பத்தில் மங்கலத்தைச் சேர்க்கும்.
இந்த நாளில் ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் மற்றும் அம்மன் பாடல்களைப் பாடி, பால் பாயாசம் அல்லது சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்வது நல்லது. மேலும், பெண் குழந்தைகளை அம்மனின் வடிவமாகப் பாவித்து அவர்களுக்கு உணவளித்து, வளையல், குங்குமச்சிமிழ், மருதாணி, மஞ்சள் மற்றும் தாம்பூலம் வழங்கிச் சிறப்பித்தால் தேவியின் பூரண அருள் கிடைக்கும்.
ஆடிச் செவ்வாய்க்கிழமையில் பெண்கள் தலைக்குக் குளித்து அம்மனை வேண்டி நோன்பு நோற்பதால், தீர்க்கசுமங்கலி பாக்கியம் எனப்படும் திருமாங்கல்ய பலம் கூடும். திருமண வயதில் உள்ள கன்னியருக்கு விரைவில் நல்ல வரன் அமைந்து திருமணம் கைகூடும். அதுமட்டுமன்றி, நீண்ட நாட்களாக மகப்பேறு இல்லாமல் தவிக்கும் தம்பதியருக்கு நல்ல மழலைச் செல்வமும், குடும்பத்தில் மகிழ்ச்சியும் பெருகும் என்பது ஐதீகம்.
