உலகளவில் மிகவும் புகழ்பெற்ற ஆன்மீகத் தலங்களில் திருப்பதி திருமலை வேங்கடவன் கோவில் முதன்மையான இடத்தில் உள்ளது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்தத் திருத்தலத்தில், ஏழுமலையானின் தாடையில் தினமும் ‘பச்சைக்கற்பூரம்’ வைப்பதை அர்ச்சகர்கள் ஒரு முக்கியச் சடங்காகச் செய்து வருகின்றனர்.

பெருமாளின் முகத்தில் எப்போதும் பச்சைக் கற்பூரம் சாற்றப்பட்டிருப்பதற்குப் பின்னால், சீனிவாசப் பெருமாளுக்கும் அவரது தீவிர பக்தரான அனந்தாழ்வாருக்கும் இடையே நடந்த ஒரு நெகிழ்ச்சியான வரலாற்றுச் சம்பவம் காரணமாக அமைந்தது.நெடுங்காலத்திற்கு முன்பு, ராமானுஜரின் சீடரான அனந்தாழ்வார் பெருமாளின் உத்தரவுப்படி திருமலையில் ஒரு பூந்தோட்டமும், அதற்கு நீர் பாய்ச்ச ஒரு குளமும் தோண்டும் பணியில் ஈடுபட்டார்.

அவருக்கு உதவியாக அவருடைய கர்ப்பிணி மனைவியும் மண் சுமக்கும் வேலையைச் செய்து வந்தார். இவர்களது தூய்மையான பக்தியைக் கண்டு மகிழ்ந்த சீனிவாசப் பெருமாள், ஒரு சிறுவனின் உருவத்தில் வந்து அனந்தாழ்வாரின் மனைவியிடம் இருந்து மண்ணை வாங்கிச் சுமந்து உதவினார். இறைவன் சேவைக்குத் தங்களைத் தவிர வேறு யாரும் இடையூறாக வரக்கூடாது என்ற வைராக்கியம் கொண்ட அனந்தாழ்வார், அந்தச் சிறுவன் உதவி செய்வதைக் கண்டு கோபமடைந்து அவனைத் துரத்திக்கொண்டு ஓடினார்.

அப்போது கோபத்தில் அனந்தாழ்வார் வீசிய மண்வெட்டி, தப்பியோடிய சிறுவனின் தாடையில் பட்டு பலத்த காயத்தை ஏற்படுத்தியது. சிறுவனும் ரத்தம் சொட்டச் சொட்ட அங்கிருந்து மறைந்தான். மறுநாள் காலையில் கோவிலின் கருவறையைத் திறந்தபோது, பெருமாள் சிலை விக்ரகத்தின் தாடையில் இருந்து ரத்தம் வழிவதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். ஓடிவந்த அனந்தாழ்வார், நேற்று இரவு தனக்கு உதவி செய்ய வந்தது தன் ஆசைப் பெருமாளான சீனிவாசனே என்பதை உணர்ந்து கதறி அழுதார்.

உடனடியாக மூலிகைகளுடன் பச்சைக் கற்பூரத்தை அரைத்து எடுத்து வந்து பெருமாளின் தாடையில் பூசி ரத்தத்தை நிறுத்தினார்.பக்தனின் கையால் அடி வாங்கிய போதிலும், அவனது உண்மையான பக்திக்குக் கட்டுப்பட்ட பெருமாள் அனந்தாழ்வாரை அணைத்து ஆசி வழங்கினார். அன்று பக்தனின் கைகளால் ஏற்பட்ட அந்தக் காயத்தின் வடு இன்றும் ஏழுமலையானின் சிலையில் உள்ளது.

அந்த வரலாற்றுச் சம்பவத்தின் நினைவாகவும், அனந்தாழ்வாரின் பக்திக்கு மதிப்பளிக்கும் விதமாகவும் இன்றும் திருப்பதியில் பெருமாளின் தாடையில் தினமும் பச்சைக் கற்பூரம் வைக்கும் சடங்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், அனந்தாழ்வார் பயன்படுத்திய அந்தப் பழமையான மண்வெட்டி இன்று திருப்பதி கோவிலின் கோபுர வாசலில் தொங்கவிடப்பட்டுள்ளது.