இயற்கையின் விசித்திரங்களும் வனவிலங்குகளின் ஆபத்தான செயல்களும் சில நேரங்களில் எதிர்பாராத சோகத்தில் முடிந்துவிடுகின்றன. அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாநிலத்தில் இராட்சதக் கரடி ஒன்று அங்குள்ள உயரமான மின்சாரக் கம்பத்தின் உச்சிக்கு ஏறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெடுஞ்சாலையில் சென்ற பயணிகள் பலர், மின்சாரக் கம்பத்தின் உச்சியில் கரடி ஒன்று நின்று கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக அவசர உதவி எண்ணிற்கும் வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். ஆபத்தான உயரத்தில் தடுமாறியபடி நின்றிருந்த அந்த கரடியை சிலர் செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களிலும் பதிவேற்றினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள், கரடியைக் காப்பாற்றுவதில் பெரும் சிக்கலை எதிர்கொண்டனர். கரடிக்கு மயக்க ஊசி செலுத்தி மீட்க முயன்றால், அது அவ்வளவு உயரத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழக்க நேரிடும் என்பதால் அதிகாரிகள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. மேலும், கரடி பயந்து கீழே இறங்குவதற்காக அப்பகுதியில் இருந்த மக்களை விலகிச் செல்லுமாறு அறிவுறுத்தினர்.

கரடி பொதுவாக பயத்தின் காரணமாகவோ அல்லது மரங்கள் என தவறாக நினைத்தோ இதுபோன்ற மின்சாரக் கம்பங்களில் ஏறிவிடுவது வழக்கம் என வனவிலங்கு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்தச் சம்பவத்தில் அதிகாரிகள் மின்சார இணைப்பைத் துண்டித்து கரடியைக் காப்பாற்ற முயல்வதற்குள், அங்கே கூடிய கூட்டத்தாலும் வாகன நெரிசலாலும் அமைதியிழந்த கரடி மின் கம்பியின் மீது தவறி உரசியது.

மின்சாரம் பாய்ந்ததில் அந்த கரடி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சோகமான காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் நிலையில், வனத்துறை சரியான நேரத்தில் மின்சாரத்தைத் துண்டித்து நடவடிக்க எடுக்கத் தவறிவிட்டதாக வனவிலங்கு ஆர்வலர்களும் நெட்டிசன்களும் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.