ஒரு காலத்தில் மடிக்கணினி வைத்திருப்பதே ஒரு பெரிய பெருமையாகக் கருதப்பட்ட காலத்தில், அதன் செயல்பாடுகளைத் தாண்டி மக்களைப் பெரிதும் கவர்ந்தது அதில் வரும் அழகான வால்பேப்பர்கள் தான். குறிப்பாக, கடல், குகை மற்றும் மணல் பரப்பை உள்ளடக்கிய புகழ்பெற்ற விண்டோஸ் வால்பேப்பர் பலரின் மனதையும் கொள்ளை கொண்ட ஒன்று.

பெரும்பாலான மக்கள் இந்தக் காட்சியை ஒரு கலைஞரின் ஓவியம் அல்லது கணினியில் உருவாக்கப்பட்ட கிராபிக்ஸ் என்றுதான் இத்தனை காலம் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், அது கற்பனை அல்ல, நிஜமான ஒரு இடம் என்பதை நிரூபிக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான விண்டோஸ் பயனர்கள் தினமும் பார்க்கும் அந்தப் புகழ்பெற்ற வால்பேப்பர் காட்சி, நியூசிலாந்தில் அமைந்துள்ள ‘வரார்கி’ கடற்கரையாகும்.

கடற்கரையோரம் அமைந்துள்ள பிரம்மாண்டமான இயற்கைப் பாறைகள், கடல் குகைகள் மற்றும் அவற்றுக்கு இடையே தெரியும் பெருங்கடல் ஆகியவை இக்கடற்கரையின் அழகைக் கூட்டுகின்றன. சாகர் மற்றும் ஆமி என்ற இணையப் பயணப் படைப்பாளர்கள், தங்கள் மடிக்கணினித் திரையில் உள்ள வால்பேப்பரையும், அதற்கு நேர் எதிரே இருக்கும் நிஜமான வரார்கி கடற்கரையையும் ஒப்பிட்டு வீடியோவாகப் பதிவிட்டு இக்கட்டுக்கதையை உடைத்துள்ளனர்.

அந்த வீடியோவில், தங்கள் லேப்டாப் திரையில் உள்ள புகைப்படத்தைக் காட்டிவிட்டு மெதுவாகக் கேமராவை நகர்த்தும்போது, அதே கடல், அதே குகைகள் மற்றும் அதே பாறை அமைப்புகள் நிஜத்தில் அப்படியே காட்சியளிக்கின்றன. இதைப் பார்த்த அந்தப் பெண் ஆச்சரியத்தில் வாயடைத்துப் போகிறார். வரார்கி கடற்கரையின் புகைப்படங்கள் எடிட் செய்யப்பட்டது என்றுதான் தாம் நினைத்ததாகவும், ஆனால் நேரில் பார்த்தபோது அங்குள்ள மணல் குன்றுகளும் கடல் வளைவுகளும் வேறொரு உலகத்திற்குச் சென்ற உணர்வைத் தந்ததாகவும் அவர்கள் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Sagar and Ami | New Zealand Travel & Lifestyle Creators 🇳🇿 (@sagarandami)

“>

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வரும் நிலையில், பலரும் இனி இந்த இடத்திற்கு நேரில் செல்வதே தங்கள் லட்சியம் எனக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த வீடியோவிற்கு அதிகாரப்பூர்வமாகப் பதிலளித்துள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனம், புகைப்படங்களை விட இந்த இடம் நிஜத்தில் இன்னும் மிகவும் அழகாக இருக்கிறது என்று பாராட்டி கமெண்ட் செய்துள்ளது. புகைப்படங்களில் மட்டுமே முடங்கிக் கிடந்த இடங்கள், மக்களை நேரில் சென்று பார்க்கத் தூண்டுவதற்கு இந்த வைரல் வீடியோ ஒரு சிறந்த சான்றாக அமைந்துள்ளது.