காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை திட்டத்தைச் செயல்படுத்துவதற்குத் கீழ்மடை மாநிலமான தமிழகத்தின் முன்கூட்டிய ஒப்புதலைப் பெற வேண்டிய அவசியமில்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எழுப்பிய எழுத்துப்பூர்வமான கேள்விக்கு மத்திய ஜல் சக்தித் துறை இணையமைச்சர் ராஜ் பூஷன் சௌத்ரி அளித்துள்ள இந்த அதிரடியான பதில் அரசியல் மற்றும் பொதுவெளியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பிப்ரவரி 2018-ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, கர்நாடகா எந்தவொரு கட்டுமானப் பணியைத் தொடங்குவதற்கும் இதர மாநிலங்களின் அனுமதியைப் பெற வேண்டும் என்ற கட்டாயம் எங்கும் குறிப்பிடப்படவில்லை என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

மேலும், 2007-ஆம் ஆண்டின் காவிரி நதிநீர் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு முரணாக இல்லாத பட்சத்தில், எந்தவொரு மாநிலமும் தங்களது எல்லைக்குள் தண்ணீரைப் பயன்படுத்திக்கொள்ள முழு அதிகாரம் உண்டு எனவும் அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கர்நாடக அரசால் சமர்ப்பிக்கப்பட்ட மேகதாது சமநிலை நீர்த்தேக்கம் மற்றும் குடிநீர் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தற்போது உரிய பரிசீலனையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நீர் ஆணையத்தின் தற்போதைய வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப திருத்தப்பட்ட அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகார அமைப்புகளுக்கு ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டு ஆவணங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.