கர்நாடக மாநிலத்தின் நீண்டகாலத் திட்டமான மேகதாது விவகாரம் குறித்து விவாதிப்பதற்காகத் தலைநகர் டெல்லியில் மிக முக்கியமான ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.
கர்நாடக முதலமைச்சரான டி.கே.சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த அதிரடிக் கூட்டத்தில், அம்மாநிலத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் அனைவரும் திரளாகக் கலந்துகொண்டு தங்களது பலத்தைக் காட்டியுள்ளனர்.
இந்த உயர்நிலைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஜெயராம் ரமேஷ் மற்றும் கர்நாடகாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மத்திய அமைச்சர்கள் பலரும் பங்கேற்றுள்ளனர்.
மேகதாது திட்டத்தை விரைவில் நிறைவேற்றுவது குறித்தும், அதற்குத் தேவையான அடுத்த கட்ட சட்டப் போராட்டங்கள் மற்றும் மத்திய அரசின் ஒப்புதலைப் பெறுவது தொடர்பாகவும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
காவிரி நதிநீர் உரிமையை மையமாகக் கொண்டு தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே ஏற்கனவே கடுமையான மோதல் போக்கு நிலவி வரும் சூழலில், டெல்லியில் அனைத்துக் கட்சி எம்பிக்களுடன் டி.கே.சிவக்குமார் நடத்தியுள்ள இந்த திடீர் ஆலோசனை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் எதிர்காலத்தில் உச்சக்கட்ட மோதலுக்கு வழிவகுக்குமா என்ற அச்சமும் கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.
