அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணத்தைச் சேர்ந்த 43 வயது சாரா கில்சன், டிக்டாக் தளத்தில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட ஃபாலோவர்களைக் கொண்டு பிரபலமாக வலம் வந்தார். இவருடைய கணவர் ஜெரேமியா “ஷான்” டஃபி என்பவர்தான், கடந்த ஜூலை 23-ஆம் தேதி இரவு சாரா கில்சனைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு, தானும் அதே துப்பாக்கியால் தற்கொலை செய்துகொண்டார். கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட கடுமையான மோதல் காரணமாக இந்தத் தற்கொலை மற்றும் கொலைச் சம்பவம் நடந்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு, சாரா கில்சனின் கணவர் மீது ஒரு சிறுமிக்குத் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார்கள் எழுந்தன. பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்ச்சியின் போது இந்தத் தவறு நடந்துள்ளது. இதைப் பார்த்த மற்றொரு பயிற்சியாளர் உடனடியாகச் சிறுமியின் பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் காவல்துறை வரை சென்றதுடன், சாரா கில்சனின் பாதுகாப்பிற்காகக் கடந்த ஜூன் 10-ஆம் தேதி நீதிமன்றம் மூலம் ஒரு அவசரகாலத் தற்காப்பு உத்தரவும் பெறப்பட்டது. இதன் மூலம் கணவர் தன்னை நெருங்கக் கூடாது என்று சாரா சட்டம் மூலம் தற்காத்துக் கொண்டார்.

 

 

ஆனால், தனது கணவரின் உண்மையான முகத்தை உலகிற்கு வெளிப்படுத்த விரும்பிய சாரா கில்சன், கடந்த ஜூலை 11 அன்று தனது டிக்டாக் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார். நெட்ஃபிக்ஸ் ஆவணப்படம் போன்று அமைக்கப்பட்ட அந்த வீடியோவில், தனது கணவர் ஒரு தவறு செய்தவர் என்றும், அது குறித்துப் பேசுவதாகவும் அவர் பதிவிட்டுருந்தார். இணையத்தில் காட்டுத் தீ போல் பரவிய இந்த வீடியோ பலத்த விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், கணவர் மீது இருந்த ஆத்திரம் காரணமாக இந்தத் துயரச் சம்பவம் அரங்கேறி உள்ளது.

சம்பவத்தன்று இரவு சாரா கில்சனின் வீட்டில் இருந்து அவசர உதவிக்கான போன் கால் வந்துள்ளது. போனில் ஒரு பெண் அலறும் சத்தமும், அதனைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டுச் சத்தமும் கேட்டுள்ளது. உடனடியாகச் சாராவின் இளம் மகனும் அவசரப் பிரிவுக்கு அழைத்து, தனது மாற்றாந்தந்தை தாயைச் சுட்டுவிட்டதாகக் கதறித் தெரிவித்துள்ளான். விரைந்து சென்ற காவல்துறையினர் இருவரின் உடல்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். துணிச்சலாக உண்மையை வெளிப்படுத்திய ஒரு பெண் கொல்லப்பட்ட இந்தச் சம்பவம் இணையவாதிகளையும் பொதுமக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.