இடைப்பட்ட உண்ணாவிரதம் என்பது இன்று உடல் எடையைக் குறைக்கவும், ஆரோக்கியத்தைப் பேணவும் பலராலும் பின்பற்றப்படும் ஒரு பிரபல உணவுமுறையாக மாறியுள்ளது. 16:8 முறை, 12:12 முறை அல்லது ஒரு நாளைக்கு இருவேளை மட்டும் உணவருந்தும் முறை எனப் பல வழிகளில் மக்கள் இதைப் பின்பற்றி வருகின்றனர். இருப்பினும், இந்த உணவுமுறை அனைவருக்கும் பாதுகாப்பானது தானா என்ற கேள்வியும் இதனுடன் சேர்ந்து எழுந்துள்ளது.
செகந்திராபாத் அப்பல்லோ மருத்துவமனையின் உணவியல் நிபுணர் டாக்டர் கஞ்சனா தயானந்த் கருத்துப்படி, இடைப்பட்ட உண்ணாவிரதம் செரிமான மண்டலத்திற்கு ஓய்வு அளித்து வளர்சிதை மாற்றத்தை உயர்த்த உதவினாலும், இது அனைவருக்கும் ஏற்றது அல்ல. டைப்-1 நீரிழிவு உள்ளவர்கள், கட்டுப்பாடற்ற சர்க்கரை நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினர் இதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
அதேபோல, சிறுநீரக நோய், இதயப் பிரச்சனைகள் மற்றும் உணவுக் கோளாறுகள் உள்ளவர்களுக்கு மருத்துவரின் வழிகாட்டுதல் இன்றி இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கக் கூடாது.முறையான திட்டமிடல் இல்லாமல் நீண்ட நேரம் பட்டினி கிடக்கும்போது உடலில் பல பக்கவிளைவுகள் ஏற்படக் கூடும். போதிய உணவும் தண்ணீரும் இல்லாத சூழலில் தலைவலி, கடுமையான சோர்வு மற்றும் தலைச்சுற்றல் போன்றவை ஏற்படும்.
மேலும், தவறான நார்ச்சத்து அளவுகள் மற்றும் போதிய நீர்ச்சத்து இன்மையால் வயிறு உப்புசம், வயிற்றுப்போக்கு அல்லது கடுமையான மலச்சிக்கல் போன்ற செரிமானம் சார்ந்த கோளாறுகள் உருவாக வாய்ப்புள்ளது.எனவே, இந்த உணவுமுறையைத் தொடங்க விரும்பும் ஆரோக்கியமான நபர்கள் நேரடியாக கடுமையான விரதத்தில் இறங்காமல், படிப்படியாக மாற வேண்டும். முதலில் நொறுக்குத் தீனிகளைத் தவிர்த்து, சத்தான உணவுகளைச் சாப்பிடப் பழகிய பின்னரே 16:8 போன்ற விரத முறைகளுக்கு நகர வேண்டும்.
முக்கியமாக, எந்தவொரு புதிய விரதப் பழக்கத்தையும் தொடங்குவதற்கு முன், உங்கள் உடலின் நிலையைக் கருத்தில் கொண்டு மருத்துவ ஆலோசனை பெறுவதே பாதுகாப்பான வழியாகும்.
