கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு உடலில் ஏற்படும் பல்வேறு ஹார்மோன் மாற்றங்களால் தலைவலி ஏற்படுவது இயல்பான ஒன்றுதான். இருப்பினும், இந்த தலைவலி அடிக்கடி வருகிறது, மிகக் கடுமையாக இருக்கிறது அல்லது போதுமான ஓய்வு எடுத்த பிறகும் குறையவில்லை என்றால், அதைச் சாதாரண விஷயமாக எடுத்துக் கொண்டு அலட்சியப்படுத்தக் கூடாது.
ஏனெனில், இது கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஏதேனும் ஒரு தீவிரமான உடல்நலப் பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம். கர்ப்ப காலத்தின் முதல் மூன்று மாதங்களில் ஏற்படும் ஹார்மோன் மாறுபாடுகள், தூக்கமின்மை, மன அழுத்தம் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு போன்றவை வழக்கமான தலைவலிக்குக் காரணமாக அமைகின்றன.
ஆனால், கர்ப்பத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களில் (4-வது மாதத்திற்குப் பிறகு) தொடர்ச்சியாகக் கடுமையான தலைவலி வந்தால், அது ரத்த அழுத்த மாறுபாட்டின் அறிகுறியாக இருக்கக்கூடும். தலைவலியுடன் சேர்ந்து பார்வை மங்குதல், முகத்தில் அல்லது கைகளில் திடீர் வீக்கம், அடிவயிற்றின் மேல் பகுதியில் வலி அல்லது வாந்தி போன்றவை இருந்தால் உடனே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஓய்வெடுத்த பிறகும் அல்லது வழக்கமான முறைகளைப் பின்பற்றியும் தலைவலி குறையவில்லை என்றால், சுயமாக மாத்திரைகளை எடுத்துக்கொள்ளாமல் உடனடியாக மருத்துவரை அணுகிப் பரிசோதனை செய்து கொள்வது அவசியமாகும்.தாயின் ஆரோக்கியமும் குழந்தையின் வளர்ச்சியும் ஒன்றோடொன்று தொடர்புடையவை.
எனவே, கர்ப்ப காலத்தில் ஏற்படும் தொடர் தலைவலியைச் சாதாரணமானது என எண்ணித் தள்ளிப்போடாமல், சரியான நேரத்தில் மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும் பெறுவது தாய்க்கும் சேய்க்கும் முழு பாதுகாப்பை உறுதி செய்யும்!
