புற்றுநோயை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிந்து குணப்படுத்துவதில் மருத்துவ உலகம் இன்றைக்கு மிகப்பெரிய வெற்றிகளைக் கண்டுள்ளது. இருப்பினும், நோயிலிருந்து மீண்ட பிறகும் கூட, பல நோயாளிகள் நாள்பட்ட சோர்வு, உடல் எடை மாற்றம், தூக்கமின்மை, நினைவாற்றல் குறைபாடு மற்றும் தீவிர மன அழுத்தம் போன்ற பல நீண்டகால உடல் மற்றும் மன ரீதியான உபாதைகளைத் தொடர்ந்து சந்திக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றனர்.
மேலும், அவர்கள் எடுத்துக்கொண்ட மருத்துவ முறைகளைப் பொறுத்து, மீண்டும் புதிய புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பும் இதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயமும் அதிகரிக்கிறது.தற்போதுள்ள மருத்துவ அமைப்பில் புற்றுநோய் சிகிச்சை முடிந்த பிறகு, நோயாளிகளைத் தொடர்ந்து பராமரிப்பதில் பல துறை மருத்துவ நிபுணர்களிடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லாததே இதற்கு முக்கியக் காரணமாக அமைகிறது. அமெரிக்கப் புற்றுநோய் ஆராய்ச்சி சங்கத்தின் ஆய்வறிக்கையின்படி, இந்தத் தொடர் பாதிப்புகள் குறிப்பிட்ட சமூகப் பிரிவினரையும், கிராமப்புற மக்களையும், குறைந்த வருவாய் உடையவர்களையுமே அதிகளவில் பாதிக்கின்றன.
இதுமட்டுமின்றி, அடிக்கடி மருத்துவமனைக்குச் செல்வது மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்வது என நோயாளிகளின் நேரமும் பணமும் அதிகளவில் விரயமாகும் மறைமுகச் சுமையும் அவர்களுக்குப் பெரும் சவாலாக மாறுகிறது.பிரச்சனைகள் தீவிரமடைந்த பின் சிகிச்சை அளிப்பதை விட, ஆரம்பத்திலேயே பாதிப்புகளைத் தடுக்கும் ‘லைஃப்ஸ்டைல் மெடிசின்’ எனும் வாழ்வியல் மருத்துவ அணுகுமுறைக்கு நாம் மாற வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். சீரான உடற்பயிற்சி, சத்தான உணவுமுறை, தரமான தூக்கம், மன அழுத்த மேலாண்மை, தீய பழக்கங்களைத் தவிர்த்தல் மற்றும் வலுவான சமூக உறவுகள் ஆகிய ஆறு தூண்களைக் கொண்டு நோயாளிகளின் வாழ்வியலை மேம்படுத்துவதன் மூலம் இந்த நீண்டகாலப் பக்கவிளைவுகளைக் கட்டுப்படுத்த முடியும்.
நாள்பட்ட தூக்கமின்மையும், மீண்டும் நோய் வந்துவிடுமோ என்ற பயமும் மனித உடலின் நரம்பு மண்டலத்தைச் சீர்குலைத்து நோயெதிர்ப்புச் சக்தியைக் குறைப்பால், தியானப் பயிற்சிகள் மற்றும் நடத்தைக் சிகிச்சைகள் மூலம் மன அழுத்தத்தைக் குறைப்பது மிகவும் அவசியமாகிறது.
எதிர்காலத்தில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நோயாளிகளுக்கு எப்போது எந்த மாதிரியான பக்கவிளைவுகள் ஏற்படும் என்பதை முன்கூட்டியே கணித்து, அதற்கேற்ப துல்லியமான சிகிச்சைகளை வழங்கி அவர்களின் ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதி செய்ய முடியும்.
