அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கு மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலும் முடக்கியுள்ள நிலையில், அங்கிருந்து வெளிவந்துள்ள ஒரு சிறுமியின் மனதை உலுக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி அனைவரின் நெஞ்சையும் கனக்கச் செய்துள்ளது.

வெள்ள நீரால் வீடு முழுவதும் மூழ்கிப் போன நிலையில், தனது எதிர்காலக் கனவான பள்ளிப் பாடப்புத்தகங்கள் நனைந்து பாழாகிவிடக் கூடாது என்பதற்காக, அச்சிறுமி சாலை ஓரத்தில் நனைந்த புத்தகங்களை ஒவ்வொன்றாக விரித்து வைத்து வெயிலில் காய வைக்கும் காட்சி அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

இயற்கைச் சீற்றத்தின் கொடூரத்திற்கு மத்தியிலும், தனது கல்வியின் மீது அச்சிறுமி காட்டும் அளப்பரிய தாகமும் நம்பிக்கையும் காண்போரைக் கண் கலங்க வைத்துள்ளது. வெள்ளத்தால் வீடே மூழ்கி, உடுத்த துணியும் உண்ண உணவும் இன்றித் தவிக்கும் நிலையிலும், அந்தச் சிறுமி தனது நனைந்த புத்தகங்களின் ஒவ்வொரு பக்கத்தையும் மிக கவனமாகப் பிரித்துச் சாலையில் காய வைத்துக் கொண்டிருந்தாள்.

அந்த நனைந்த தாள்களில் அவள் தனது சொந்தப் பாடங்களை மட்டும் காய வைக்கவில்லை, மாறாகத் தனது வருங்காலக் கனவையும் நம்பிக்கையையும் தான் தேடிக் கொண்டிருக்கிறாள் என்பதை உணர்த்தும் வகையில் அந்தச் காட்சி அமைந்துள்ளது.

சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்து பேரழிவு நிலவினாலும், வறுமையையும் இயற்கையின் சீற்றத்தையும் தாண்டி அந்தச் சிறுமி மன உறுதியோடு நிற்கும் காட்சி, கல்வி ஒன்றே வாழ்வின் விடியல் என்பதை உலகுக்கு உரக்கச் சொல்கிறது. சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ, வெறும் ஒரு வெள்ள பாதிப்புச் செய்தி மட்டுமல்லாமல், கடினமான சூழ்நிலையிலும் கல்விக்கான போராட்டத்தை வெளிப்படுத்தும் ஒரு மனித காவியமாகவே பார்க்கப்படுகிறது.

இந்த வீடியோவைக் கண்ட லட்சக்கணக்கான நெட்டிசன்கள், அந்தச் சிறுமியின் கல்வித் தாகத்தைப் பாராட்டி வருவதுடன், அவளது எதிர்காலப் படிப்பிற்குத் தேவையான உதவிகளைச் செய்ய அரசின் கவனத்திற்கும் சமூக ஆர்வலர்களின் கவனத்திற்கும் கொண்டு சென்று வருகின்றனர். “எவ்வளவு பெரிய துயரம் வந்தாலும் உன் படிப்புக்கான கனவு வீண் போகாது தாயே!” என்று நெட்டிசன்கள் பலரும் அச்சிறுமிக்குத் தங்களது ஆதரவுகளையும் வாழ்த்துகளையும் உருக்கமாகப் பதிவிட்டு வருகின்றனர்.

“>