கர்நாடக மாநிலம் பெங்களூருவின் ராமமூர்த்தி நகர் பகுதியில், தனக்காக முன்பதிவு செய்யப்பட்ட வாடகை காரை எதிர்நோக்கிச் சாலையில் காத்துக் கொண்டிருந்த பெண் ஒருவரிடம், இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் மிகவும் தவறான முறையில் நடந்து கொண்டதாக அதிர்ச்சி குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அந்தப் பெண் தெரிவித்துள்ள தகவலின்படி, ஸ்கூட்டரில் வந்த அந்த நபர் மிக ஆபாசமான தொனியில் அவரிடம் தவறான கேள்விகளைக் கேட்டு வம்பு இழுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், உடனடியாகத் தனது செல்போனை எடுத்து அந்த நபரின் செயல்களை வீடியோவாகப் பதிவு செய்யத் தொடங்கியுள்ளார்.
தான் வீடியோ எடுக்கப்படுவதைக் கவனித்த அந்த நபர், உடனே அந்தப் பெண்ணை மிகவும் மோசமான வார்த்தைகளால் திட்டிவிட்டு, அங்கிருந்து தனது ஸ்கூட்டரில் வேகமாகத் தப்பிச் சென்றுள்ளார். தனக்கு நேர்ந்த இந்த அநியாயத்தை அந்தப் பெண் முழுமையாக வீடியோ எடுத்துச் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
மேலும், அந்த வீடியோவுடன் பெங்களூர் நகரக் காவல்துறையின் அதிகாரப்பூர்வ கணக்கைக் டேக் செய்து, சம்பந்தப்பட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாகப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
