இயற்கையின் எழில் கொஞ்சும் எழில்மிகு மாநிலமான இமாச்சல பிரதேசத்தில், கடல் மட்டத்திலிருந்து பல ஆயிரம் அடிகள் உயரத்தில் அமைந்துள்ள ஆன்மீக அற்புதம் தான் ‘கின்னர கைலாசம்’. சிவபெருமானின் புனிதமான வாழிடங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த மலையில், சுமார் 45 அடி உயரமும் 16 அடி அகலமும் கொண்ட பிரம்மாண்டமான இயற்கை சிவலிங்கம் அமைந்துள்ளது.

சிவபெருமானின் குளிர்கால இருப்பிடமாகப் போற்றப்படும் இத்தலம், ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான ஆன்மீகப் பயணிகளையும் மலைையேறுபவர்களையும் தன்வசம் ஈர்த்து வருகிறது. இந்த சிவலிங்கத்தின் மிகப்பரிய அதிசயம் என்னவென்றால், இது ஒரே நாளில் பலமுறை தனது நிறத்தை மாற்றிக்கொள்வதுதான்! சூரியனின் கதிர்கள் விழுவதற்கு ஏற்ப, காலையில் வெண்மை நிறத்திலும், மதிய வேளையில் மஞ்சள் நிறத்திலும், மாலையில் சிவந்த அக்னி நிறத்திலும் எனத் தினமும் சுமார் ஏழு முறை இந்த சிவலிங்கம் நிறம் மாறுகிறது.

இயற்கையின் இந்த விசித்திரமான மாற்றம், காண்போரைக் மெய் சிலிர்க்க வைக்கும் ஆன்மீக அனுபவத்தைத் தருகிறது. மேலும், இந்த சிவலிங்கத்தின் அருகிலேயே ‘பார்வதி குண்டம்’ என்ற புனித தீர்த்தக் குளம் அமைந்துள்ளது. மகாபாரத காலத்து வரலாற்றுத் தொடர்புடைய இந்த தீர்த்தத்தில் நீராடி, சிவபெருமானை மனமுருகி வழிபட்டதால், குழந்தைப் பேறு இல்லாத தம்பதிகளுக்குச் சந்தான பாக்கியம் கிடைக்கும் என்பது காலம் காலமாக நிலைத்து நிற்கும் நம்பிக்கையாகும்.

சிவ-பார்வதி தேவியரின் நினைவுகளை சுமந்து நிற்கும் இந்த குண்டம் ஆன்மீக ரீதியாக மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மகாபாரதத்தில் அர்ஜுனன் பசுபதாஸ்திரம் பெற சிவபெருமானை நோக்கித் தவமிருந்த புனிதத் தலமாகவும் இது கருதப்படுகிறது. பனி படர்ந்த மலை சிகரங்களுக்கு மத்தியில், மனித கரங்களால் உருவாக்கப்படாமல் இயற்கையாகவே தோன்றி சிவபெருமானின் அருள் அலைகளைப் பரப்பும் இந்த கின்னர கைலாசம், ஆன்மீகமும் இயற்கையின் அதிசயமும் ஒன்றிணைந்த ஒரு மகத்தான புனிதத் தலமாகத் திகழ்கிறது.