நவீன டிஜிட்டல் காலத்தில், சிறிய குழந்தைகள் முதல் டீனேஜ் சிறுவர்கள் வரை பெரும்பாலானோருக்குத் தூக்கமின்மை ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. லேப்டாப், ஸ்மார்ட்போன் பயன்பாடு மற்றும் கட்டுப்பாடற்ற நேர அட்டவணை ஆகியவற்றால் குழந்தைகளின் தூக்கம் பாதிக்கப்படுகிறது. சரியான தூக்கம் கிடைக்காத போது, அது அவர்களின் உடல் ஆரோக்கியம், மூளை வளர்ச்சி மற்றும் மனநிலையைக் கடுமையாகப் பாதிக்கிறது என்று குழந்தைகள் நல நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஒவ்வொரு வயதுடைய குழந்தைகளுக்கும் குறிப்பிட்ட அளவு தூக்கம் மிகவும் இன்றியமையாதது. பிறந்த குழந்தைகள் முதல் சிறு குழந்தைகள் வரை தினமும் 11 முதல் 14 மணி நேரமும், பள்ளி செல்லும் குழந்தைகள் 9 முதல் 11 மணி நேரமும், டீனேஜ் வயதினர் 8 முதல் 10 மணி நேரமும் தூங்குவது அவசியம். தூக்கம் குறையும் போது குழந்தைகளுக்குக் கவனம் செலுத்துவதில் சிரமம், கோபம், சோர்வு மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
குழந்தைகளின் தூக்க முறையைச் சீரமைக்கப் பெற்றோர்கள் சில முக்கியமான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இரவில் தூங்குவதற்கும் காலையில் எழுவதற்கும் நிலையான ஒரு நேரத்தை நிர்ணயிக்க வேண்டும். தூங்குவதற்குச் குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே மொபைல் போன், டிவி, டேப்லெட் போன்ற டிஜிட்டல் திரைகளைப் பயன்படுத்துவதை முற்றிலுமாகத் தவிர்க்கச் செய்வது மிகவும் அவசியமாகும்.
மேலும், குழந்தைகள் தூங்கும் அறை அமைதியாகவும், லேசான வெளிச்சத்துடனும், வசதியாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இரவில் எளிதில் செரிமானமாகும் உணவுகளை வழங்குவதும், தூங்குவதற்கு முன் புத்தகங்கள் வாசிப்பது அல்லது மெல்லிசைக் கதைகள் கூறுவது போன்ற அமைதியான பழக்கங்களை உருவாக்குவதும் அவர்களின் தூக்கத் தரத்தை கணிசமாக உயர்த்தும்.
