உத்தரப் பிரதேசம் ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் ஆண் வாரிசு வேண்டும் என்ற ஆசையில் இரு திருமணம் செய்துகொண்ட விவகாரம் தற்போது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் மனைவி மூலம் இரண்டு பெண் குழந்தைகளும், இரண்டாம் மனைவி மூலம் இரண்டு பெண் குழந்தைகளும் பிறந்த நிலையில், கணவர் இரண்டாம் மனைவியுடன் மட்டுமே வாழ்ந்துவிட்டு முதல் மனைவியை கைவிட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட குடும்பச் சண்டை மற்றும் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க அப்பகுதியில் உள்ள கிராமப் பஞ்சாயத்து ஒரு விசித்திர தீர்ப்பை வழங்கியது.
அதன்படி, கணவன் வாரத்தில் 3 நாட்கள் முதல் மனைவியுடனும், அடுத்த 3 நாட்கள் இரண்டாம் மனைவியுடனும் தங்க வேண்டும் என்றும், 7-வது நாளை அவர் எங்கு வேண்டுமானாலும் செலவிடலாம் என்றும் பஞ்சாயத்து உத்தரவிட்டது. ஆரம்பத்தில் இந்தத் தீர்ப்புக்கு அனைவரும் சம்மதித்தாலும், அந்த விசித்திர ஃபார்முலா ஒரு வாரத்திற்குள்ளேயே படுதோல்வி அடைந்துள்ளது. பஞ்சாயத்து தீர்ப்பு வழங்கிய ஏழு நாட்களுக்குப் பிறகு, ஞாயிற்றுக்கிழமை அன்று இரண்டாம் மனைவி தனது இரண்டு குழந்தைகளில் ஒருவரைக் கூட்டிக்கொண்டு திடீரென வீட்டை விட்டு மாயமானார்.
கணவன் பல இடங்களில் தேடியும் மனைவியைக் கண்டுபிடிக்க முடியாததால் தற்போது குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து ததியால் காவல் நிலையப் பொறுப்பாளர் பிரிஜேஷ் குமார் ஜெய்வால் தெரிவிக்கையில், இதுவரை தங்களுக்கு எந்தவிதமான எழுத்துபூர்வ புகாரும் வரவில்லை என்றும், புகார் அளிக்கப்பட்டால் அதன் அடிப்படையில் முறையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
