ஹரியானா மாநிலம் கைத்தல் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தீப் ஜாகௌலி என்பவர், நாட்டின் முதல்முறையாக எருமைகள் மற்றும் காளை மாடுகளுக்காக ‘எருமை அழகு நிலையத்தை’ (Buffalo Beauty Parlour) தொடங்கி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார். மனிதர்களுக்கு அழகு நிலையம் இருப்பது வழக்கம் என்றாலும், கால்நடைகளுக்கான இந்த புதிய முயற்சி நாடு முழுவதும் பெரும் ஆச்சரியத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த விசித்திரமான அழகு நிலையத்தில் கால்நடைகளின் உடல் தோற்றத்தை அழகுபடுத்தும் பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, பிரத்யேக கருவிகளைக் கொண்டு கால்நடைகளின் கொம்புகள் பளபளப்பாக பாலிஷ் செய்யப்படுவதுடன், கோடைகாலத்தில் அவற்றுக்கு வெப்பத்திலிருந்து நிவாரணம் அளிக்கும் வகையில் உடல் முடிகள் நேர்த்தியாக வெட்டப்படுகின்றன. மேலும், விலங்கு கண்காட்சிகள் மற்றும் போட்டிகளுக்கு அழைத்துச் செல்லப்படும் கால்நடைகளுக்கு இந்த பார்லர் மூலம் சிறப்புத் தோற்றம் அளிக்கப்படுகிறது.
அழகுப் பராமரிப்புடன் சேர்த்து கால்நடைகளின் ஆரோக்கியத்திற்கும் இங்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கால்நடைகளின் குளம்புகள் சுத்தப்படுத்தப்பட்டு ட்ரிம் செய்யப்படுவதால், அவற்றுக்கு நடப்பதில் உள்ள சிரமங்கள் நீங்குவதோடு நோய்த்தொற்றுகளும் தவிர்க்கப்படுகின்றன. மேலும், விபத்துகளில் கொம்புகளை இழந்த கால்நடைகளுக்கு, பார்ப்பதற்கு அசல் போலவே தோற்றமளிக்கும் ‘செயற்கைக் கொம்புகள்’ மாற்றும் சேவையும் இங்கு வழங்கப்படுகிறது.
வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் மற்றும் பூனைகளைப் போல பால் தரும் கால்நடைகளின் தூய்மையும் பராமரிப்பும் மிகவும் அவசியமானது என்ற நோக்கத்துடன் சந்தீப் இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளார். இதன் காரணமாக அக்கம் பக்கத்து மாவட்டங்களைச் சேர்ந்த கால்நடை வளர்ப்போர் தங்களது விலங்குகளுக்கு மேக்ஓவர் செய்ய ஆர்வமுடன் இங்கு வந்து செல்கின்றனர்.
சந்தீப் ஜாகௌலி தனது இன்ஸ்டாகிராம் பக்கமான (official_sandeep_jaakholi) மூலமாகவும் இந்த சேவைகளை உலகிற்குப் பரப்பி வருகிறார். தற்போது 25 ஆயிரத்திற்கும் அதிகமான பின்தொடர்பாளர்களைக் கொண்டுள்ள அவரது பக்கத்தில் பதிவிடப்படும் கால்நடைகளின் மேக்ஓவர் மற்றும் ஹேர்கட் வீடியோக்கள் இணையத்தில் அதிகம் பேரால் ரசிக்கப்பட்டு வருகின்றன.
