நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா குறித்த விவாதங்கள், இந்திய அரசியலில் மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்புக்கூறல் பற்றிய புதிய உரையாடலைத் தொடங்கியுள்ளன. இருப்பினும், இந்திய அரசியல் வரலாற்றில் மக்கள் ஆக்ரோஷம், ஊழல் புகார்கள் மற்றும் பெரும் விபத்துகளுக்காக அமைச்சர்கள் பதவியை விலகுவது இது முதன்முறையல்ல.
கடந்த காலங்களிலும் இதுபோன்ற பல முக்கிய நிகழ்வுகள் தலைவர்களின் ராஜினாமாவிற்கு வழிவகுத்துள்ளன. இந்திய அரசியலில் ‘அறநெறிப் பொறுப்பேற்று’ பதவி விலகிய சம்பவங்களில் மிக முக்கியமானது 1956-ஆம் ஆண்டு நடைபெற்ற அரியலூர் ரயில் விபத்து ஆகும். 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த அந்தப் கொடூர விபத்துக்குப் பிறகு, அப்போதைய மத்திய ரயில்வே அமைச்சராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி, விபத்திற்குத் தான் பொறுப்பேற்றுத் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்தார்.
அதேபோல, 1999-ஆம் ஆண்டு கெய்சால் ரயில் விபத்திற்குப் பிறகு நிதிஷ் குமாரும், 2000-ஆம் ஆண்டில் நடைபெற்ற ரயில் விபத்தைத் தொடர்ந்து மம்தா பானர்ஜியும் தங்களது அமைச்சர் பதவிகளைத் துறந்தனர். பாதுகாப்புக் குறைபாடுகள் மற்றும் மக்கள் கொந்தளிப்பு காரணமாகவும் அமைச்சர்கள் பதவி விலக நேரிட்டுள்ளது. 1962-ஆம் ஆண்டு இந்திய-சீனப் போரின் போது ஏற்பட்ட பாதுகாப்பு பின்னடைவுகளுக்குப் பொறுப்பேற்று அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் வி.கே.கிருஷ்ண மேனன் பதவி விலகினார்.
அதேபோல, 2008-ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, நாட்டின் பாதுகாப்பில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு பொறுப்பேற்று அப்போதைய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் தனது பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது. இவை தவிர, ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் முறைகேடு புகார்கள் இந்திய அரசியலில் பல அமைச்சர்களின் நாற்காலியைப் பறித்துள்ளன.
2ஜி அலைக்கற்றை ஊழல் புகாரில் ஏ.ராசா மற்றும் கனிமொழி ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி முறைகேடு விவகாரத்தில் சுரேஷ் கல்மாடி மீதான நடவடிக்கை எனப் பல்வேறு காலகட்டங்களில் எழுந்த அரசியல் அழுத்தங்கள் அமைச்சர்களைப் பதவி விலக வைத்தன. தற்போதைய நீட் விவகாரமும் அந்த வரிசையில் இந்திய அரசியலின் பொறுப்புக்கூறலை மீண்டும் நினைவூட்டியுள்ளது.
