இன்றைய நவீன காலத்தில் குழந்தைகளின் மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கவழக்கங்கள் காரணமாக, சிறு வயதிலேயே உடல் எடை வேகமாக அதிகரிக்கும் பிரச்சனை பெரும் கவலையாக உருவெடுத்துள்ளது. சிறுவயதில் ஏற்படும் இந்த அதிக உடல் எடை, எதிர்காலத்தில் நீரிழிவு, இதய நோய்கள் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற பல கடுமையான ஆரோக்கியச் சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

எனவே, பெற்றோர் இப்போதே விழித்துக்கொண்டு குழந்தைகளின் உடல் எடையைக் கட்டுப்படுத்த கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும். குழந்தைகளின் உடல் எடைக் குறைப்பில் ஆரோக்கியமான உணவு முறையே முதல் அடியாகும். பாக்கெட் உணவுகள், நொறுக்குத் தீனிகள், துரித உணவுகள்  மற்றும் அதிக சர்க்கரை நிறைந்த கூல்ட்ரிங்க்ஸ்களைக் குழந்தைகளுக்குக் கொடுப்பதைத் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.

அதற்குப் பதிலாக, தினமும் அவர்களின் உணவில் காய்கறிகள், புதிய பழங்கள், நட்ஸ் மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுகளை அதிக அளவில் சேர்த்துக்கொள்வது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். உணவுக் கட்டுப்பாட்டோடு சேர்த்து உடற்பயிற்சியும் மிகவும் முக்கியமானது. தற்காலத்தில் குழந்தைகள் பெரும்பாலான நேரத்தைச் செல்போன் மற்றும் டிவிகளுக்கு முன்னே செலவிடுவதால் உடல் உழைப்பு பெருமளவில் குறைந்துவிட்டது.

இதைத் தவிர்க்க, தினமும் குறைந்தது ஒரு மணி நேரமாவது ஓடிப்பிடித்து விளையாடவோ, சைக்கிள் ஓட்டவோ அல்லது அவர்களுக்குப் பிடித்த விளையாட்டுகளில் ஈடுபடவோ பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். இது கலோரியை எரித்து உடல் எடையைக் சீராக வைக்க பெரிதும் உதவும்.இவற்றுடன் சேர்த்து போதிய உறக்கமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும் குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் எடை பராமரிப்பிற்கும் மிகவும் இன்றியமையாதது.

இரவு நேரத்தில் செல்போன் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தி, சரியான நேரத்தில் தூங்க வைக்கும் பழக்கத்தை உருவாக்க வேண்டும். இந்தச் சிறிய மற்றும் ஆரோக்கியமான வாழ்வியல் மாற்றங்களை இன்றிலிருந்தே கடைப்பிடிப்பதன் மூலம், குழந்தைகளின் உடல் எடையைக் கட்டுக்குள் கொண்டுவந்து அவர்களின் எதிர்காலத்தை நோயற்றதாக மாற்ற முடியும்.