மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகே உள்ள ஜமுனியா பதரியா கிராமத்தில், இரவு உணவு பரிமாறுவதில் ஏற்பட்ட தாமதத்தால் ஆத்திரமடைந்த மகன், தனது தாயைக் கொடூரமான முறையில் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த 50 வயதான ஜமுனா பாய் மராவி என்பவருக்கும், அவரது மகன் தீபக் என்பவருக்கும் இடையே உணவு தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த தீபக், வீட்டில் இருந்த சட்டி மற்றும் அரிவாளால் தனது தாயைத் தாக்கியதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

தாயைக் கொலை செய்த பிறகு, தீபக் அவரது உடலை ஒரு புடவையால் மூடிவிட்டு, இரவு முழுவதும் அந்த பிணத்தின் அருகிலேயே அமர்ந்திருந்தான். மறுநாள் காலை தந்தை வீட்டிற்கு வந்து பார்த்தபோதுதான் இந்த கொடூரக் கொலை வெளிச்சத்திற்கு வந்தது.

வீட்டில் இருந்த தீபக்கின் மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரனும் சகோதரியும் இந்தச் சம்பவத்தை அறியாமல் இருந்துள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார், தீபக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒருவேளை உணவிற்காக பெற்ற தாயையே மகன் கொன்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.