ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியதால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து எரிசக்தி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், அமெரிக்காவின் தடையில் இருந்து 30 நாட்கள் விலக்கு பெற்ற பிறகு இந்தியா மீண்டும் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கத் தொடங்கியுள்ளது.

ஆனால், முன்பு போல ரஷ்யா தற்போது இந்தியாவுக்கு சலுகை விலையில் எண்ணெய் வழங்கவில்லை. சில வாரங்களுக்கு முன்பு ஒரு பேரல் 50 டாலருக்கு விற்ற ரஷ்யா, இப்போது மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள விநியோகத் தடையைப் பயன்படுத்தி 90 டாலர் என்ற கூடுதல் விலைக்கு இந்தியாவிற்கு எண்ணெயை விற்பனை செய்கிறது.

ரஷ்யா இந்தியாவைச் சுரண்டுவதாக எழுந்துள்ள விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ள வல்லுநர்கள், இது வெறும் சந்தைப் பொருளாதாரமே தவிர வேறில்லை என்று கூறுகின்றனர். முன்பு ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் தடை விதித்திருந்தபோது, அவர்களுக்கு வேறு வழியில்லாததால் இந்தியாவுக்குக் குறைந்த விலையில் எண்ணெய் வழங்கினார்கள்.

ஆனால் இப்போது அமெரிக்காவின் தளர்வுகள் மற்றும் வளைகுடா நாடுகளின் போர்ச் சூழலால் ரஷ்ய எண்ணெய்க்கான தேவை அதிகரித்துள்ளது. எனவே, நட்பைப் பார்க்காமல் சர்வதேச சந்தை நிலவரப்படி லாபம் ஈட்டும் நோக்கில் ரஷ்யா விலையை உயர்த்தியுள்ளதாக நிபுணர்கள் விளக்குகின்றனர்.