ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) துபாய் நகரத்திற்குச் சுற்றுலா சென்றுவிட்டு இந்தியா திரும்பிய பெண் ஒருவர், துபாயின் தூய்மையையும் டிராபிக் விதிகளையும் இந்தியாவோடு ஒப்பிட்டுப் பேசியுள்ள வீடியோ தற்போது சோசியல் மீடியாவில்  நெட்டிசன்களிடையே பெரும் விவாதத்தையும் மோதலையும் கிளப்பியுள்ளது.

நிகிதா லக்வானி (Nikita Lakhwani) என்ற இந்தியப் பெண் துபாய் பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பிய போதிலும், தனது உடல்தான் இங்கு வந்திருக்கிறதே தவிர, தனது மனமும் இதயமும் இன்னும் துபாயின் பளபளப்பான, தூசியில்லாத சாலைகளில்தான் சுத்திக் கொண்டிருக்கிறது என்று ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Nikita Lakhwani (@nikkiyapped)

அந்த வீடியோவில் அவர், துபாயில் கடுமையான போக்குவரத்து விதிகள் பின்பற்றப்படுவதால் அங்குள்ள ஜி-வேகன் (G-Wagon) போன்ற சொகுசு கார்கள் கூட இந்தியாவில் ஓடும் சாதாரண ஐ20 (i20) கார்களைப் போல மிக அமைதியாகவும் ஒழுங்காகவும் ஓட்டப்படுகின்றன என்றும், பாதசாரிகள் ரோட்டைக் கடக்க ஜீப்ரா கிராசிங்கில் (Zebra crossing) கால் வைத்தால் போதும், அனைத்து ஆடம்பரக் கார்களும் உடனடியாக நின்று அவர்களுக்கு ஒரு விஐபி போன்ற உணர்வைத் தருகின்றன என்றும் வியந்து பேசியுள்ளார்.

மேலும், அங்கு தூசியோ அல்லது காற்று மாசோ இல்லாததால், சுத்தத்தை அதிகம் விரும்பும் ஒசிடி (OCD) குறைபாடு உள்ளவர்களுக்குத் துபாய் ஒரு ‘டிஸ்னி வேர்ல்டு’ (Disney World) போலக் காட்சியளிக்கிறது என்றும், துபாயில் மிக மெதுவாகக் கார் ஓட்டினால் கூட அபராதம் விதிக்கும் விசித்திரமான சட்டம் இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

துபாயில் வசிக்கும் தனது தோழியின் மிகப்பெரிய கவலையே அவளது எமிராட்டி கார்டைத் (Emirati card) தொலைத்து விடுவோமோ என்பதுதான் என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்ட நிகிதா, “எனக்கும் கூட இப்படிப்பட்ட பணக்காரக் கவலைகள் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்” எனத் தன் பாணியில் கலாய்த்துள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் பயங்கர ட்ரெண்டாகி வரும் வேளையில், கமெண்ட் செக்ஷனில் குதித்த நெட்டிசன்கள் பலரும், “துபாய் எப்போதும் துபாய்தான், அங்கு சட்டம்தான் முதலிடம்” என்றும், “சுற்றிப் பார்ப்பதற்கும் பாதுகாப்புக்கும் உலகிலேயே ஐக்கிய அரபு அமீரகத்தை விடச் சிறந்த இடம் எதுவும் இல்லை” என்றும் நிகிதாவின் கருத்துக்கு ஆதரவாகத் துபாயைப் புகழ்ந்து தள்ளி கமெண்டுகளைப் பறக்கவிட்டு வருகின்றனர்.