உலகக்கோப்பை 2026 கால்பந்து தொடரில் இங்கிலாந்து மற்றும் கானா அணிகள் மோதவிருக்கும் மெகா போட்டிக்கு முன்பாக, இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி கேனுக்கு (Harry Kane) கானா நாட்டைச் சேர்ந்த மாந்த்ரீகர் ஒருவர் விசித்திரமான முறையில் பில்லி சூனிய மிரட்டல் விடுத்துள்ளது உலகக் கால்பந்து ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கானா நாட்டின் பிரபல ஆன்மீகவாதி மற்றும் மாந்த்ரீகரான நானா குவாக்கு போன்சம் (Nana Kwaku Bonsam) என்பவர், இந்த உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் சிறப்பாக விளையாடுவதைத் தடுக்கத் தான் ஆன்மீக சக்திகளைப் பயன்படுத்தி வருவதாக அதிரடியாகக் கிளப்பிவிட்டுள்ளார்.

அவருக்குப் பெரிய அளவில் காயம் எதையும் ஏற்படுத்தப் போவதில்லை என்றும், ஆனால் மைதானத்தில் அவர் கோல் அடித்து இங்கிலாந்தை வெற்றி பெற வைக்காமல் கானா அணிக்குச் சாதகமாக முடிவை மாற்றப் போவதாகவும் அவர் சவால் விட்டுள்ளார். இதற்கு முன்பாக கடந்த 2014 உலகக்கோப்பை தொடரில் போர்ச்சுகல் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பு கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ஏற்பட்ட முழங்கால் காயத்திற்கும் தானே காரணம் என இதே போன்சம் உலகளவில் பரபரப்பைக் கிளப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குரோஷியாவுக்கு எதிரான கடந்த போட்டியில் மாஸாக 2 கோல் அடித்து செம ஃபார்மில் இருக்கும் ஹாரி கேன், இன்னும் ஒரே ஒரு கோல் அடித்தால் உலகக்கோப்பை வரலாற்றில் இங்கிலாந்தின் அதிகபட்ச கோல் அடித்த வீரரான கேரி லினேக்கரின் சாதனையை முறியடித்துப் புதிய சரித்திரம் படைப்பார் என்பதால் இந்த ஆட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாந்த்ரீகரின் இந்த வினோதமான பேச்சுக்கு அப்பால், இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் தாமஸ் துஹெல் (Thomas Tuchel) தங்களது உலகக்கோப்பை கனவை நனவாக்க வீரர்களுக்குக் கடுமையான பயிற்சிகளை வழங்கி முழு கவனத்துடன் ஆட்டத்திற்குத் தயாராகி வருவதாக அணியின் டிஃபெண்டர் ஜெட் ஸ்பென்ஸ் தெரிவித்துள்ளார்.

மைதானத்திற்கு வெளியே இந்த சூனியப் பேச்சுக்கள் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள வேளையில், இந்த விசித்திர விவகாரம் தற்போது சோசியல் மீடியாவில் விளையாட்டு ரசிகர்களிடையே செம ட்ரெண்டாகி வருகிறது.