திரைப்படங்களைத் தாண்டி தனது கிரிக்கெட் திறமையால் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளார் பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான். லண்டனில் உள்ள உள்ளூர் கிரிக்கெட் கிளப் மைதானத்தில் அவர் பந்துவீச்சில் கலக்கிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், புகழ்பெற்ற கிரிக்கெட் வீரருமான மன்சூர் அலி கான் பட்டௌதியின் மகனான சைஃப் அலி கான், சிறுவயது முதலே கிரிக்கெட் பாரம்பரியத்தைக் கொண்ட குடும்பத்திலிருந்து வந்தவர். லண்டன் கிளப் மேட்ச் ஒன்றில் பாரம்பரியமான வெள்ளை நிற கிரிக்கெட் சீருடையில் களமிறங்கிய அவர், நேர்த்தியான ரன்-அப் மற்றும் பந்துவீச்சு மூலம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
View this post on Instagram
பிரின்ஸ் கிரிக்கெட் அகாடமி வெளியிட்ட இந்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. தனது 50 வயதைக் கடந்த நிலையிலும் உடல் தகுதியுடன் சுறுசுறுப்பாக அவர் பந்துவீசிய விதம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அவரது பந்துவீச்சு பாணியைப் பார்த்த பலரும், இங்கிலாந்தின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேரன் கஃப்பின் ஸ்டைலுடன் ஒப்பிட்டு தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
தந்தையின் வழியில் கிரிக்கெட் மீது தீராத ஆர்வம் கொண்டுள்ள சைஃப் அலி கான், கிரிக்கெட் விளையாட்டின் மீதான தனது ஒழுக்கம் மற்றும் ஈடுபாடு குறித்து பல மேடைகளில் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார். சினிமா உலகில் தேசிய விருது வென்ற நடிகரான சைஃப் அலி தற்போது இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் அக்ஷய் குமாருடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
