சொந்த நாட்டில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய அவலநிலையும், தனியார் மருத்துவமனைகளில் அநியாயக் கட்டணமும் இருக்கும் சூழலில், வெளிநாட்டினர் பலரும் தங்களது உயிர்காக்கும் மருத்துவ தேவைகளுக்காக இந்தியாவை நோக்கி வரத் தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில், இங்கிலாந்தைச் சேர்ந்த ஜீன் பால் என்ற நோயாளி, தன் நாட்டில் அறுவைசிகிச்சைக்காக பல ஆண்டுகள் காத்திருக்க முடியாமல் பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் கடந்து இந்தியா வந்து வெற்றிகரமாக முழங்கால் மாற்று அறுவைசிகிச்சை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
சர்வதேச நோயாளிகள் தங்களின் தடையற்ற சிறப்புச் சிகிச்சைக்காக இந்தியாவின் ‘ஹீல் இன் இந்தியா’ திட்டத்தை அதிகளவில் நாடி வருவதை இந்தச் சம்பவம் தெளிவாக உணர்த்துகிறது.இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையான என்.ஹெச்.எஸ் அமைப்பில் நிலவும் கடுமையான தாமதம் காரணமாக, ஜீன் பால் தனது இரு முழங்கால்களையும் மாற்றுவதற்கு சுமார் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
இதனால் தன் மனைவியுடன் மாலையில் நடைபயிற்சி செல்ல முடியாமலும், செல்லப் பிராணிகளை அழைத்துச் செல்ல முடியாமலும் நாளாந்த வாழ்க்கையின் சிறு சிறு மகிழ்ச்சிகளை இழந்து கடும் வேதனையை அனுபவித்து வந்தார். தன் சொந்தச் செலவில் ஸ்கேன் செய்து பார்த்தபோது, இரண்டு கால்களிலும் உடனடியாக அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் உறுதியளித்த போதிலும், ஒரே நேரத்தில் இரு கால்களுக்கும் அறுவைசிகிச்சை செய்ய இங்கிலாந்து மருத்துவ கட்டமைப்பு மறுத்துவிட்டது.
நீண்ட காலம் காத்திருக்க விரும்பாத ஜீன் பால், ‘தி மெடிக்கல் டிராவல் கம்பெனி’ என்ற மருத்துவ சேவை நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு இந்தியா வர முடிவு செய்தார். விமானப் பயணத்திற்கும் அறுவை சிகிச்சைக்கும் உடல் தகுதியைப் பெற, மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களின் வழிகாட்டுதலின்படி பல மாதங்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு சுமார் 19 கிலோ எடையைக் குறைத்தார்.
பின்னர் இந்தியா வந்தடைந்த அவருக்கு, டெல்லியில் உள்ள பிரபல மேக்ஸ் மருத்துவமனையில் மருத்துவர்கள் ஒரே நேரத்தில் இரு முழங்கால்களையும் வெற்றிகரமாக மாற்றி அமைத்தனர். அறுவைசிகிச்சைக்குப் பிறகு இரண்டு வாரங்கள் தீவிர இயன்முறை சிகிச்சை (Physiotherapy) பெற்று, தற்போது பூரண குணமடைந்து அவர் இங்கிலாந்து திரும்பியுள்ளார்.
இந்த இரண்டு நாட்டு மருத்துவ அமைப்புகளுக்கு இடையே உள்ள நிதி மற்றும் சேவை இடைவெளி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இங்கிலாந்தில் தனியார் மருத்துவமனையில் இந்த ஒரே அறுவைசிகிச்சைக்கு மட்டும் சுமார் 51 லட்சத்திற்கும் மேல் ($40,000 பவுண்டுகள்) செலவாகும் என மதிப்பிடப்பட்ட நிலையில், இந்தியாவில் இரு வழி விமானக் கட்டணம், தங்குமிடம், உணவு, காப்பீடு மற்றும் முழுமையான மருத்துவ பராமரிப்பு என அனைத்தும் சேர்த்து வெறும் 18 லட்சத்திலேயே ($14,000 பவுண்டுகள்) முடிந்துள்ளது.
தரம், விரைவான சேவை மற்றும் குறைந்த செலவு காரணமாக சர்வதேச மருத்துவ சுற்றுலாத்துறையில் இந்தியா உலக நாடுகளுக்கே முன்னோடியாக உருவெடுத்து வருகிறது என்பதற்கு இந்த ஜீன் பாலின் கதையே சான்றாகும்.
