மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையே ஏற்படும் மோதல்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, காடுகளை ஒட்டியுள்ள கிராமங்களில் பயிர்களை சேதப்படுத்த வரும் காட்டு யானைகளை விரட்டுவது கிராம மக்களுக்குப் பெரும் சவாலாகவே இருந்து வருகிறது.

அந்த வகையில், நெல் வயலுக்குள் புகுந்த காட்டு யானை ஒன்றை, கையில் தீப்பந்தங்களை ஏந்தி மக்கள் விரட்ட முயன்ற போது, அந்த யானை ஆக்ரோஷமடைந்து அவர்களை நோக்கிப் பாய்ந்து வந்த அதிர்ச்சிகரமான சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வயலுக்குள் புகுந்து நெற்பயிர்களை சேதப்படுத்திய யானையை அச்சுறுத்தி விரட்டுவதற்காக, கிராம மக்கள் சிலர் கைகளில் தீப்பந்தங்களை ஏந்தியபடி சத்தமிட்டு யானையை நோக்கிச் சென்றுள்ளனர். ஆனால், வழக்கத்திற்கு மாறாகத் தீயைக் கண்டு பயந்து ஓடாத அந்த யானை, மக்களின் இந்தச் செயலால் மேலும் கோபமடைந்தது.

மேலும் திடீரென உரத்த குரலில் பிளிறியபடி, தீப்பந்தங்களை ஏந்தி வந்த மக்களை நோக்கி அதிவேகமாகப் பாயத் தொடங்கியது. யானையின் இந்த எதிர்பாராத ஆக்ரோஷத்தைக் கண்டு உறைந்துபோன மக்கள், கையில் இருந்த தீப்பந்தங்களைப் போட்டுவிட்டு உயிரைக் கையப் பிடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர்.

இந்த முழுச் சம்பவமும் வீடியோவாகப் பதிவாகி இணையத்தில் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மனிதர்களின் வாழ்விட ஆக்கிரமிப்பாலும், உணவுத் தேவைகளாலும் காட்டை விட்டு வெளியேறும் காட்டு விலங்குகளைக் கையாளும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்குச் சான்றாக இந்தச் சம்பவம் அமைந்துள்ளது.

வனவிலங்குகளை இதுபோன்ற ஆபத்தான முறையில் விரட்ட முற்படுவது அவர்களின் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்றும், வனத்துறையினருக்கு உடனடியாகத் தகவல் தெரிவிப்பதே பாதுகாப்பானது என்றும் வன ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

“>