பற்களை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்றால் தினமும் பல் துலக்குவது மிக அவசியம். ஆனால், பற்களைச் சுத்தம் செய்கிறோம் என்ற பெயரில் நாம் செய்யும் சில தவறான பழக்கங்கள், பற்களின் வெளிப்புற பாதுகாப்பு அடுக்கான ‘எனாமலை’த் தேய்த்துப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். ஒருமுறை எனாமல் தேய்ந்துவிட்டால், அதை உடலால் மீண்டும் இயற்கையாக உருவாக்க முடியாது. இதனால் பின்நாட்களில் பல் கூச்சம், நிறமாற்றம் மற்றும் பல் சிதைவு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
பற்களைப் பலமாகத் தேய்த்தால்தான் நன்றாகச் சுத்தமாகும் என்று பலர் நினைத்து, கடினமான பிரஷ்ஷைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், அதிக அழுத்தத்துடன் பல் துலக்குவது எனாமலைத் தேய்ப்பதோடு ஈறுகளையும் பின்வாங்க வைக்கும். எனவே, மென்மையான பிரிஸ்டில்கள் (Soft bristles) கொண்ட பிரஷ்ஷைப் பயன்படுத்தி, குறைந்த அழுத்தத்தில் முறையாகப் பல் துலக்குவதே சரியான முறையாகும்.
அதேபோல குளிர்பானங்கள், எனர்ஜி டிரிங்க்ஸ், தேநீர், காபி மற்றும் எலுமிச்சை போன்ற சிட்ரஸ் உணவுகளை அடிக்கடி எடுத்துக்கொள்வது வாயில் அமிலத்தன்மையை அதிகரிக்கும். இந்த அமிலத் தாக்குதலால் எனாமல் மென்மையாகும். எனவே, இதுபோன்ற பானங்களைக் குடித்த உடனே பல் துலக்குவதைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாகத் தண்ணீரில் வாயைக் கொப்பளிப்பது எனாமலைப் பாதுகாக்கும்.
சமூக வலைத்தளங்களில் பார்த்துவிட்டு எலுமிச்சை, பேக்கிங் சோடா, ஆக்டிவேட்டட் சார்கோல் போன்றவற்றை வைத்து வீடிலேயே பற்களை வெண்மையாக்க முயற்சிப்பதும் எனாமலைச் சிதைக்கும். பற்கள் வெண்மையாவதை விட, மருத்துவரின் ஆலோசனையோடு சரியான பற்பசையைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவதும், உடலுக்குப் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதுமே பற்களின் வலிமைக்கு நல்லது.
எனாமல் தேய்மானம் ஆரம்பத்தில் வெளியே தெரியாது என்றாலும், நாளடைவில் சூடான அல்லது குளிர்ந்த உணவைச் சாப்பிடும்போது பல் கூச்சமும் வலியும் ஏற்படும். எனாமல் சேதமடைந்த பிறகு அதை மீட்டெடுக்க முடியாது என்பதால், ஆரம்பத்திலேயே விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம். சரியான முறையில் பல் துலக்கி, உணவுப் பழக்கத்தில் சிறிய மாற்றங்களைச் செய்தாலே நமது அழகான புன்னகையையும் பற்களின் ஆரோக்கியத்தையும் நீண்ட காலம் பாதுகாக்க முடியும்.
