பாகிஸ்தானின் கராச்சி நகரில் பெண்களுக்காக பிரத்யேகமாக இயக்கப்படும் ‘பிங்க் பஸ்’ (Pink Bus) அருகே மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர், பேருந்தில் பயணித்த பெண் பயணிகளுக்கு ஆபாசமாகத் தனது ரகசிய உறுப்புகளைக் காட்டி சில்மிஷத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ஒட்டுமொத்தப் பாகிஸ்தானிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கராச்சியின் ரஷித் மின்ஹாஸ் (Rashid Minhas) சாலையில் பெண்கள் மட்டுமே பயணிக்கும் பிங்க் பஸ் சென்று கொண்டிருந்தபோது, அதன் பக்கத்திலேயே மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபர், பேருந்தின் வேகத்திற்கு இணையாகத் தனது பைக்கை ஓட்டிச் சென்று ஆபாச அங்கம் காட்டி வக்கிரமாக நடந்து கொண்டுள்ளார்.

இந்த அருவருப்பான செயலை பேருந்திற்குள் இருந்த பெண் பயணி ஒருவர் தனது மொபைலில் வீடியோவாகப் பதிவு செய்ய, அந்த வீடியோ எக்ஸ் (ட்விட்டர்) போன்ற தளங்களில் உள்ளூர் பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களால் பகிரப்பட்டு வைரலானது. இதனையடுத்து நெட்டிசன்கள் உயர் போலீஸ் அதிகாரிகளை டேக் செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி ஆன்லைனில் கொதித்தெழுந்தனர்.

பொதுமக்களின் இந்த ஆக்ரோஷமான எதிர்ப்பைத் தொடர்ந்து, உடனடியாகக் களமிறங்கிய சிந்து மாகாணப் போலீசார் (Sindh Police), அந்த பைக்கின் பதிவு எண்ணை வைத்துத் தீவிரமாகத் தேடி, ஜோராபாத் பகுதியைச் சேர்ந்த அர்ஸ்லான் (Arsalan) என்ற அந்த காமுக ஆசாமியை அதிரடியாகக் கைது செய்து கம்பி எண்ண வைத்துள்ளனர்.

போலீசார் தடியடி காட்டியதும் பயந்துபோன அந்த நபர், “கடந்த ஜூன் 19ஆம் தேதி ரஷித் மின்ஹாஸ் சாலையில் நான் செய்தது மிகப்பெரிய தவறு, ஒட்டுமொத்தப் பெண்களிடமும், பொதுமக்களிடமும், காவல் துறையிடமும் நான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், இனி இப்படி ஒரு தவறை என் வாழ்க்கையிலேயே செய்ய மாட்டேன்” என்று கைகூப்பி கதறி அழும் வீடியோ வாக்குமூலத்தை போலீசார் தற்போது வெளியிட்டுள்ளனர்.

கலப்புப் பேருந்துகளில் பெண்கள் சந்திக்கும் தொல்லைகளுக்குப் தீர்வாகத் கொண்டுவரப்பட்ட இந்த சிறப்பு பிங்க் பஸ்ஸிற்கு வெளியேயும் பெண்களுக்கு இப்படி ஒரு விபரீத ஆபத்து நேரிட்டுள்ள இந்த சம்பவம், தற்போது சோசியல் மீடியாவில் பெண்களின் பாதுகாப்பு குறித்த பெரும் விவாதத்தைக் கிளப்பி, வைரலாகி வருகிறது.