செயற்கை நுண்ணறிவுஉலகத்தில் முன்னணி நிறுவனமாகத் திகழும் ‘ஆந்த்ரோபிக்’ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான டாரியோ அமோடியின் மனைவி காமி கிளார்க், பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீனிடம் தனது தொழிலுக்காக நிதி திரட்ட முயன்றதாக வெளிவந்துள்ள தகவல்கள் டெக் உலகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

பிரபல ஏஐ சாட்பாட்டான ‘கிளாட்’  தயாரிப்பாளரான ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டாரியோ அமோடியும், பெண் தொழில்முனைவோரான காமி கிளார்க்கும் கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இதற்கு முன்பு கூகுள் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ எரிக் ஷ்கிமிட்டுடன் டேட்டிங்கில் இருந்த காமி கிளார்க், தற்போது தன் கணவரின் ஆந்த்ரோபிக் நிறுவனத்திற்கு மூலோபாய ஆலோசகராகவும் வழிகாட்டியாகவும் செயல்பட்டு வருவதாக ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க நீதித்துறையால் வெளியிடப்பட்ட ஜெஃப்ரி எப்ஸ்டீனின் பழைய ஆவணங்கள் மற்றும் மின்னஞ்சல்கள் தற்போது பல திடுக்கிடும் உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளன. காமி கிளார்க் இதற்கு முன்பு பெண்களுக்காக “இலவச சொகுசு ஆபாசப் படம்” மற்றும் “சமூக உணவு முறை செயலி” போன்ற தொழில்களை நடத்தியதாக ‘போர்ப்ஸ்’ இதழ் முன்பு செய்தி வெளியிட்டிருந்தது.

குறிப்பாக, ‘எடிஸ்’  என்ற பெயரில் அவர் நடத்தி வந்த அந்த சொகுசு ஆபாசப் நிறுவனத்தில் முதலீடு செய்யுமாறு, குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு பின்னர் இறந்த ஜெஃப்ரி எப்ஸ்டீனிடம் காமி கிளார்க் அணுகியிருப்பது ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இலக்கிய முகவரான ஜான் பிராக்மேன் என்பவரால் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் எப்ஸ்டீனுடன் காமி கிளார்க்கிற்கு அறிமுகம் கிடைத்துள்ளது. எப்ஸ்டீனுக்கு அனுப்பிய மின்னஞ்சல்களில், தனது நிறுவனத்திற்கு நிதி உதவி வழங்குவது குறித்து கிளார்க் விவாதித்துள்ளார்.

இருப்பினும், எப்ஸ்டீன் அந்தத் தொழிலில் முதலீடு செய்தாரா என்பது குறித்த உறுதியான தகவல்கள் நீதித்துறை வெளியிட்ட ஆவணங்களில் இடம்பெறவில்லை. எனினும், இருவரும் சுமார் இரண்டு ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியாக மின்னஞ்சல்கள் மூலம் தொடர்பில் இருந்துள்ளனர்.

இதற்கிடையில், ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் சிஇஓ டாரியோ அமோடியின் சொத்து மதிப்பு சுமார் 15.5 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஓபன்ஏஐ  சிஇஓ சாம் ஆல்ட்மேனின் சொத்து மதிப்பான 3.4 பில்லியன் டாலரைக் காட்டிலும் மிக அதிகமாகும். மேலும், உலகப் புகழ்பெற்ற ஏஐ நிறுவனமான ஆந்த்ரோபிக் விரைவில் தனது பங்கு வெளியீட்டை தொடங்கத் தயாராகி வரும் வேளையில், இந்தச் செய்தி தொழில்நுட்ப வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.