கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  மகன் ஒருவன், பெற்ற தாய் மற்றும் தந்தையை அடித்துக் கொன்ற கோரச் சம்பவம் அப்பகுதியையே உலுக்கி எடுத்துள்ளது. பெற்றெடுத்த பிள்ளையே எமன் போல் மாறி செய்த இந்தத் துயரச் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இடுக்கி மாவட்டம், ஏழுக்கம்வயல் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன் (55), விவசாயி. இவரது மனைவி வல்சம்மா (50). இவர்களுக்கு ஜோதிஷ் (43) என்ற மகன் உள்ளார். மகன் ஜோதிஷ் தனது தந்தை சந்திரனுடன் சேர்ந்து விவசாய வேலைகளைக் கவனித்து வந்தார்.

ஆனால், ஜோதிசுக்கு தீவிரமாக மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து பெற்றோரிடம் தகராறு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மதுவுக்கு அடிமையான இவனது தொல்லையால் அந்தத் குடும்பமே நிம்மதியிழந்து தவித்துள்ளது.

சம்பவத்தன்று வழக்கம்போல் ஜோதிஷ் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். வந்ததும் தந்தை சந்திரனிடம் மது அருந்தப் பணம் கேட்டு நச்சரித்துள்ளார். ஆனால், மகன் தொடர்ந்து குடித்து நாசமடைவதை விரும்பாத சந்திரன் பணம் தர மறுத்துள்ளார். இதனால் தந்தைக்கும் மகனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் வெடித்தது.

தந்தை பணம் தர மறுத்த ஆத்திரத்தில் நிலைதடுமாறிய ஜோதிஷ்  வீட்டில் கிடந்த இரும்புக்கம்பியைக் கொண்டு தாய், தந்தை என்றும் பாராமல் இருவரையும் கொடூரமாகத் தாக்கியுள்ளான். கணவன்-மனைவிகள் இருவரும் அலறியடித்துக் கீழே விழ, விடாமல் அவர்களின் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த சந்திரனும் வல்சம்மாவும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்துத் தகவலறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக நெடுங்கண்டம் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரின் உடல்களையும் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாகக் கொலை வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பெற்றோரை அடித்துக் கொன்ற கொடூர மகன் ஜோதிஷை அதிரடியாகக் கைது செய்தனர். அவனிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. பெற்றெடுத்தவர்களையே போதை வெறியில் மகன் தீர்த்துக்கட்டிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.